நாட்டில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரபல உணவு வழங்கல் வலையமைப்பு தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி, அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்துக்கு தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
தொழில் அமைச்சு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அண்மைக்காலமாக குறித்த உணவு வழங்கல் வலையமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபரால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தவும்.
அத்துடன், தொழிலாளர் சட்ட விதிகளுக்கு இணங்க, குறித்த நிறுவனத்தினால் ஊழியர்களுக்காக ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கான கொடுப்பனவுகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் விரிவாக ஆராய வேண்டும்.
குறித்த உணவு வழங்கல் வலையமைப்பின் நாடு முழுவதும் 12 கிளைகள் இயங்கி வருகின்றது. அவை ஒவ்வொன்றிலும் தொழில் திணைக்கள அதிகாரிகள் குழு ரீதியான பரிசோதனைகளையும் ஒருங்கிணைந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளவும்.
இதேவேளை, குறித்த நிறுவனத்தின் சில கிளைகள் கடந்த காலத்தில் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், அந்த கிளைகள் மூடப்பட்டபோது அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள், நட்டஈடுகள் மற்றும் ஏனைய தொழில்சார் உரிமைகள் முறையாக வழங்கப்பட்டனவா என்பதையும் விசாரணையின் கீழ் கொண்டுவரவும்.
மேலும், குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது பணியிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பணிச்சூழல் தொடர்பான குறைகள், வேலை நிபந்தனைகள், தொழில்துறை தகராறுகள் மற்றும் ஏனைய சிக்கல்கள் குறித்து நேரடியாக அவர்களிடமிருந்து கருத்துகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ளவும்.
இந்த விசாரணையின்போது பெறப்படும் தகவல்கள், மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மற்றும் சேகரிக்கப்படும் அனைத்து தரவுகளையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையொன்றை தயாரித்து, எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்குள் தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவிடம் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குள்ளான பிரபல உணவு வழங்கல் வலையமைப்பு தொடர்பில் உடனடி விசாரணை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space