கொழும்பு - புறக்கோட்டைப் பகுதியில் சுமார் 20 கோடி ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் புறக்கோட்டையின் நான்கு வெவ்வேறு இடங்களில் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 2 இலட்சத்து 4 ஆயிரம் (204,000) போதைமாத்திரைகளும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 4 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி மற்றும் வத்தளை - மாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 31 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதலில் மட்டக்குளியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருந்தகம் ஒன்றிற்கு அருகில் 6,000 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.
முதல் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு மாத்திரைகளை வழங்கிய மற்றொரு நபர் 6,000 மாத்திரைகளுடன் மெலிபன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, பிரதான விநியோகஸ்தராகக் கருதப்படும் வத்தளை - மாபொல பகுதியைச் சேர்ந்த நபர் 1 இலட்சத்து 80 ஆயிரம் மாத்திரைகள் மற்றும் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து 12,000 மாத்திரைகளைப் பெற்றுக்கொண்ட வத்தளைப் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபரும் புறக்கோட்டை பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைமாத்திரைகள் தொடர்பாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் 20 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space