கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் தேசிய மக்கள் சக்தியின் முறையற்ற கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை முறையாக சேகரிக்காமை ஆகியவற்றால்தான் இன்று டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை (8) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கெரவலப்பிட்டிய பகுதியில் கழிவு மேலாண்மைக்காக நாம் அமைத்த மத்திய நிலையத்தின் பணிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் அங்கு பெரும் குப்பை மேடு உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றி, அருவக்காலு பகுதிக்கு குப்பைகளை கொண்டு செல்லும் வசதிகளைக் கொண்ட பேலியகொட குப்பை முற்றம் அனைத்து வசதிகளுடன் காணப்பட்ட போதிலும், கடந்த 6 ஆண்டுகளாக அந்த செயல்முறை கைவிடப்பட்டுள்ளது. தற்போதைய நிர்வாகத்தின் பலவீனம் மற்றும் தவறான மேலாண்மை காரணமாகவே இந்த டெங்கு பரவல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்திலும் டெங்கு நோய் இருந்ததுதானே என்று சிலர் உடனடியாகக் கேட்கலாம்.
ஆனால், இந்த நாட்டில் முறையான கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு எதிராக எப்போதும் போராட்டங்களை நடத்தி, அத்தகைய திட்டங்களை முடக்கியது அநுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினரே ஆவர். 1997 ஆம் ஆண்டு புளுமெண்டல், மட்டக்குளி, வேரஹெர ஆகிய குப்பை மேடுகள் இவர்களின் போராட்டங்களால்தான் உருவாயின. கெரவலப்பிட்டிய மின்சார உற்பத்தி திட்டத்தின் அடிக்கல் நாட்டிய நாளன்று கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். அருவக்காலு திட்டம் நல்லது என்று இன்று பிரதமர் கூறினாலும், அன்று அதற்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி, கொழும்பு மாநகர சபையின் குப்பை சரக்கு வாகனங்கள் மீது கல்வீச்சு நடத்தினார்கள்.
இவ்வாறான செயல்களைச் செய்தவர்கள், தொடர்ந்தும் கடந்த கால ஆட்சிகளை மட்டும் குறை கூறிக் கொண்டிருக்காமல், தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த கழிவு மேலாண்மை கட்டமைப்புகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு அதனைச் செய்ய முடியாவிட்டால், நாம் தன்னார்வமாக முன்வந்து அதுக்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
குப்பை மேலாண்மை குறைபாடே டெங்கு பரவலுக்கு காரணம் – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space