திருகோணமலை, கருமலையூற்று கடற்கரைப் பகுதியில் விமானப்படையினரால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடை மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நேற்று (14) வியாழக்கிழமை அப்பகுதிக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டு மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த மே மாதம் 5ஆம் திகதி காலை, கருமலையூற்று கடற்கரைப் பகுதியில் பல தசாப்தங்களாக பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தி வந்த பிரதான வீதியில், விமானப்படையினரால் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென வீதி தடை (Road Barrier) ஒன்று அமைக்கப்பட்டது. எவ்வித அனுமதியுமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையும் உருவானது.
இந்த விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, குறித்த வீதித் தடை அகற்றப்படும் என பிரதி அமைச்சர் அன்றைய தினமே உறுதியளித்திருந்தார். இருப்பினும், வீதித் தடை முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் கள நிலவரத்திற்கு முரணாக உள்ளன.
நேற்றையதினம் நான் மேற்கொண்ட கள விஜயத்தின் போது, அகற்றப்பட்டதாகக் கூறப்பட்ட கடவை இன்னும் வீதிக்கு அருகிலேயே காணப்படுவதையும், அப்பகுதியில் தொடர்ச்சியாக விமானப்படை அதிகாரிகள் நிலைகொண்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. இது மக்களிடையே பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது வீதியை மூடுவதற்கு யாருடைய உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது?
முறையான முன்னறிவித்தல் இன்றி இவ்வாறான ஒரு தன்னிச்சையான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அகற்றப்பட்ட கடவை ஏன் இன்னும் அந்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது?
கடவை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டு 9 நாட்கள் கடந்தும், ஏன் இன்னும் விமானப்படை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறாமல் தங்கியுள்ளனர்?
உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் பாதிக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும். வெறுமனே கண்துடைப்பு நடவடிக்கைகளைச் செய்யாமல், குறித்த வீதித் தடையை அவ்விடத்திலிருந்து முழுமையாக அகற்றி, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
கருமலையூற்று வீதித் தடை முழுமையாக அகற்றப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் எம்பி வலியுறுத்து
Ad Space
Ad Space
Ad Space
Ad Space