கண் சிகிச்சைகளின் பின்னர் 'பெட்ரிசிலோன் அசிடேட்' என்ற கண்ணுக்கான திரவ மருந்தைப் பயன்படுத்தியமையால் விழிப்புலனை இழந்துள்ள மேலும் நான்கு நோயாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதிக்கும் மே மாதம் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், குறித்த திரவ மருந்து பயன்படுத்தியமையால் நுவரெலியா பொது மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட சிலருக்கு கண் பார்வையற்றுப் போனமை அல்லது தொடர்ந்து பார்வை குறைவடைந்தமை போன்ற சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட பின்னர் கண் பார்வையை இழந்த 17 நோயாளர்களுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக, அதே காலப்பகுதியில் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனை தவிர்ந்த ஏனைய மருத்துவமனைகளில் கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளும் போது இம்மாத்திரை திரவ மருந்துப் பாவனையால் கண் குறைபாடுகளுக்கு ஆளாகியுள்ள நோயாளர்களைச் சோதனை செய்து அறிக்கைப்படுத்துவதற்காக விசேட தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அக்குழுவினால் விழிப்புலனை இழந்துள்ளதாகக் கண்டறியப்பட்டு, நட்டஈடு செலுத்துவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ள ஏனைய மருத்துவமனைகளைச் சேர்ந்த குறித்த 4 நோயாளர்களுக்கே இவ்வாறு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நட்டஈடு வழங்குவதற்கு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
கண் பார்வை பாதிக்கப்பட்ட மேலும் 4 பேருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா நட்டஈடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space