இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள் பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கங்காராமய விகாரையில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த இடமான குஜராத் பிரதேசத்தில் 60களில் கண்டெடுக்கப்பட்டதும், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படாததுமான புத்த பெருமானின் இந்த உடல்சார் புனிதச் சின்னங்களை நாட்டு மக்கள் வழிபடுவதற்காக இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி பங்களிப்புடன் கொழும்பு மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (31) இது குறித்த விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பெறுபேறாக, இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் கொண்டுவரப்படும் இப்புனிதச் சின்னங்கள், பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்குக் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் காட்சிப்படுத்தப்படும்.
அதிகளவிலான பக்தர்கள் வழிபடுவதற்காக புனிதச் சின்னங்கள் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வு 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் அதேவேளை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட முன்னுரிமை வரிசை முறையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தச் சமய நிகழ்விற்கு வருகை தரும் பக்தர்களுக்காகப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை முறைப்படுத்துவதற்கு அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து திட்டங்களை வகுத்துள்ளன. இதற்கமைய புகையிரதத் திணைக்களம், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் சேவைகள் இணைந்து விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை முன்னெடுப்பதோடு, பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குவிதிமுறைகளை அமுல்படுத்தவுள்ளனர்.
வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்காகத் ‘அன்னதானம்’ மற்றும் உபசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாவட்ட வர்த்தகச் சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தி, பக்தர்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் இன்றி இந்த அரிய புனிதச் சின்னங்களை வழிபடுவதற்கான அனைத்து ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த விசேட கலந்துரையாடலில் கங்காராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கங்காராமய விகாரையில் வைக்கப்படவுள்ள புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space