இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மாறாக, ஒற்றையாட்சி முறைமைக்குள் (ஏக்கிய ராச்சிய) முடங்கி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே. சுகாஸ் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர், "இந்த ஆண்டு (2026) தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்புமிக்க ஆண்டாகும்.
ஏனெனில், வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானம் எனப்படும் 'தமிழீழப் பிரகடனம்' நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
ஆனால், இந்த 50ஆவது ஆண்டை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்த வரலாற்றுப் பிரகடனத்தை முன்னின்று வழிநடத்திய தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சி, இன்று அதற்கு முற்றிலும் மாறான ஒரு அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
ஒற்றையாட்சி வரைவுக்கு முட்டுக்கொடுக்கும் தமிழரசு "தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கொண்டுவந்து நிறைவேற்றத் தயாராகிவரும் ஒற்றையாட்சி (ஏக்கிய ராச்சிய) அரசியலமைப்பு வரைபை உருவாக்குவதில், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் முதன்மைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அவரால் எழுதப்பட்ட, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இந்த 'ஏக்கிய ராச்சிய' வரைபைத் தமிழர்களின் அரசியல் தீர்வாக அவர்கள் தலையில் திணிப்பதற்கு தமிழரசுக் கட்சி மிகத் தீவிரமாக முனைப்புக்காட்டி வருகின்றது.
இத்தகைய செயல்பாடானது, 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான செயலாகும்."
தந்தை செல்வாவிற்கு இழைக்கப்படும் அரசியல் துரோகம் "வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பிரகடனப்படுத்திய தந்தை செல்வா வழிவந்த தமிழரசுக் கட்சி, இன்று ஒற்றையாட்சிக்கும் ஏக்கிய ராச்சிய வரைவுக்கும் முட்டுக்கொடுத்து அதற்குள் முடங்கிக் கிடப்பது, வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கும் அதனைத் தலைமை தாங்கி நடத்திய தந்தை செல்வாவிற்கும் இழைக்கப்படும் அப்பட்டமான அரசியல் துரோகமாகும்." என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space