அனுபவம் இல்லாதவர்களுக்கு நாட்டின் நிர்வாகத்தை வழங்கிவிட்டு மக்கள் திண்டாடி வருகிறார்கள். அதனால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்றால் முடியுமானவர்களுக்கு ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (24) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
76 வருட சாபம் தொடர்பில் கதைத்துவந்த இந்த அரசாங்கம் தற்போது முழு நாட்டுக்கும் சாபமாக மாறியுள்ளது. மக்கள் எதிர்பார்ப்புடனே இந்த அரசாங்கத்துக்கு ஆட்சியை வழங்கினார்கள்.
ஊழல் மோசடி, திருட்டு, வீண்விரயங்கள் இல்லாமல்போகும் என்றே மக்கள் நம்பினார்கள். தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்து, அது தொடர்பான விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னர் தற்போது திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளது. இவ்வாறான சம்பவம் வரலாற்றில் ஒருபோதும் இடம்பெற்றதாக கேள்விப்பட்டதில்லை.
மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தே இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அதனால் தற்போது திருட்டு வேலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி மத்திய வங்கியில் இருந்தே திருடியுள்ளனர்.மத்திய வங்கியில் இருந்த பணம் காணாமல் போயுள்ளதாக இதற்கு முன்னர் ஒருபோதும் தெரிவிக்கப்பட்டதில்லை.
அதேபோன்று நெருக்கடி நிலைமையை பயன்படுத்தி ஒரு பீப்பாய் டீசல் 286 டொலருக்கு கொள்வனவு செய்திருக்கிறார்கள். இவர்கள் இதனை தெரியாமல் செய்கிறார்களா? அல்லது அனுபவம் இல்லாமல் செய்கிறார்களா அல்லது அமைச்சின் செயலாளர்கள் முறையாக ஆலாேசனை வழங்காததால் இவ்வாறு செய்கிறார்களா என ஒன்றும் தெரியாமல் இருக்கிறது.
அதனாலே அனுபவம் உள்ளவர்களுக்கு ஆட்சியை வழங்குமாறு தெரிவித்தோம். என்றாலும் அநுரகுமார திசாநாயக்க அனுபவம் இல்லை என தெரிவிக்க முடியாது.
ஏனெனில் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ், மைத்திரிபால சிறிசேன ஆகிய அனைவரது அரசாங்கத்திலும் அநுரகுமார திசாநாயக்க முட்டுக்கொடுத்துக்கொண்டு இருந்துள்ளார்.நிறைவேற்று சபைகளிலும் இருந்துள்ளார். அதனால் இவர்கள் அனைத்தும் தெரிந்துகொண்டே இவ்வாறு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதனால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்றால் முடியுமானவர்களுக்கு கொடுத்துவிட்டு விலகிக்கொள்ள வேண்டும். காலி முகத்திடல் போராட்டம் இடம்பெற்றபோது, கோட்டாபய ராஜபக்ஷ் நாட்டைவிட்டு சென்றுவிட்டார். அதன்போது நாட்டை பொறுப்பேற்க முன்வருமாறு தெரிவிக்கப்பட்டபோது வாய்சவடால் தலைவர்கள் யாரும் முன்வரவில்லை.
அதன்போது நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்லும்போது, மக்கள் அவரை தேர்தலில் தோற்கடித்து, அனுபவம் இல்லாத எல் போட் காரர்களுக்கு நாட்டை ஒப்படைத்தார்கள். தற்போது அவர்கள் எல் போட்டுன் பயணிக்கும்போது ஒவ்வாெரு நாளும் எங்காவது ஒரு இடத்தில் மோதிக்கொள்கிறார்கள்.
அதனால் அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கிகளில் பணம் வைப்பிலிட்டிருக்கும் மக்களுக்கும் தங்களது பணம் பாதுகாக்கப்படுமா என்ற அச்சம் ஏற்படும். அதனால் இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் ; அஸாத் சாலி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space