உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்தியபோதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.ஒருவருக்கு அரசியல் பாதுகாப்புக் கிடைப்பதும், மற்றவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதும் தவறானதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் உரும்பிராய் பகுதியில் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பாடலை பாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
அவர் மேலும் பதிவேற்றம் செய்துள்ளதாவது,
அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான கைது கவலையளிக்கின்றன.
பாடல் ஒன்றில் விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பான விடயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இசையும் கலைத்துவ வெளிப்பாடும் இப்போது பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுமானால், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலை புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்தியபோதும், பகிர்ந்துகொண்டபோதும் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவர் அரசியல் நலன்களுக்காக இத்தகைய பாடல்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பொலிஸார் எங்கே இருந்தனர். அப்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எங்கே இருந்தது?
விடுதலை புலிகள் அமைப்பு என்பது சட்டத்தின் பிரகாரம் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகவே இன்றும் காணப்படுகிறது. புலிகள் அமைப்பின் கொள்கைகளை எவரும் ஊக்குவிப்பதையோ அல்லது வெளிப்படுத்துவதையோ நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும், ஓர் இளம் பாடகரும் ஒரே மாதிரியான செயல்களுக்காகக் குற்றம் சாட்டப்படும்போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்புக் கிடைப்பதும், மற்றவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதும் தவறானதாகும்.
அரசியல் நோக்கத்துத்துக்காகவும், தேவைக்காகவும், சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும், சாதாரண இளைஞர்களுக்கு பிறிதொரு சட்டமும் இருப்பது ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை என்று அரசாங்கம் நம்பினால் , அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பொறுப்புக்கூறல் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இந்தக் கைது அதிகாரத்தை தெரிவு செய்து துஷ்பிரயோகம் செய்யும் ஒரு செயலாகவே பார்க்கப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் புலிகளின் பாடலை பயன்படுத்திய ஆளும் தரப்பினர் ஏன் கைது செய்யப்படவில்லை?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space