இஸ்ரேலியக் கொடியை அவமதித்ததாகக் கூறப்படும் போலித் தகவலின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 09 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 21 வயதுடைய இளைஞரிடம் பொலிஸ் அதிகாரி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். அத்துடன், அவருக்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த முஹமட் ரிபாய் முஹமட் சுஹேல் என்ற இளைஞர், கடந்த 2024 அக்டோபர் மாதம் சமூக ஊடகத்தில் இஸ்ரேலியக் கொடியைச் சேதப்படுத்தும் வகையிலான பதிவை இட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தெஹிவளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அந்த இளைஞர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று திங்கட்கிழமை (23) தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தெஹிவளை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.பி. ஹேரத், நீதிமன்றத்தில் முன்னிலையாகி, நீதவான் நீதிமன்றத்திற்குத் தான் தவறான தகவல்களை வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது செயலால் அந்த இளைஞரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதை ஏற்றுக்கொண்ட அவர், அதற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்ததுடன், 20 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையைத் திறந்த நீதிமன்றத்தில் கையளித்துள்ளார்.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், குறித்த இளைஞருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எவ்வித ஆதாரமும் இல்லை எனச் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றினால் அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தார்.
இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்ததை அடுத்து, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராகத் தான் தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டைத் திரும்பப் பெறவும் அந்த இளைஞர் சம்மதித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான பதிவுக்காக 09 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்ட இளைஞர்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space