இரு தொகுதிகளில் போட்டி: தேர்தல் செலவை வேட்பாளர் ஏற்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி
Ad Space
Ad Space
தேர்தல்களில் இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்யும் போது, தேர்தல் செலவை திருப்பி செலுத்துவதாக உத்தரவாத பத்திரம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மேலூரை சேர்ந்த மணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்றம், மக்களவை தேர்தல்களில் சில வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதனால் அரசுக்கு செலவு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ராஜினாமா செய்யும் தொகுதியின் தேர்தல் செலவுகளை ஏற்க வேண்டும் என உத்தரவாத பத்திரம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட சட்டம் அனுமதியளிக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Ad Space
Ad Space