இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக விசாரித்து முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தி்ல் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னத்தை முடக்குவது தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், பெங்களூரு புகழேந்தி, கோவை சுரேன் பழனிசாமி உள்ளிட்டோர் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீதான முதல்கட்ட விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயம் செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பதிலுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் பிஹார் தேர்தல் காரணமாக வேளைப்பளு இருப்பதால், அதிமுக உள்கட்சி பிரச்சினை மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யக்கூடாது என்றும், இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு போதிய காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், முதல்கட்ட விசாரணை நடத்தி அதன்பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, திண்டுக்கல் சூரியமூர்த்தி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இந்த விசாரணையி்ல் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டால் வழக்கு விசாரணை நீர்த்துப்போய் விடும் என்பதால் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிக்க உத்தரவிடக்கோரி மனு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space