இன்று முதல் ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிப்பு
Ad Space
Ad Space
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக, விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
3 கட்டமாக கட்டணம் உயர்வு
உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் பயணிகள் கட்டணம் 3 கட்டமாக அதிகரிக்கப்படுகிறது.
அதன்படி, முதல் கட்டமாக மார்ச் 12-ம் தேதி (இன்று) அதிகாலை முதல் உள்நாடு மற்றும் சார்க் நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் செல்லும் சர்வதேச விமானங்களுக்கு ரூ.399 கட்டணம் உயர்த்தப்படுகிறது.
பயணிகள் அதிர்ச்சி
மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு 10 அமெரிக்க டாலர் (ரூ.920), தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 20 டாலர் (ரூ.1,840), ஆப்பிரிக்க நாடுகளுக்கு, 30 டாலர் (ரூ.2,760) கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. இனிமேல் அந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
2-ம் கட்ட கட்டண உயர்வு 18-ம் தேதி அதிகாலை முதல் அமலாகும். ஐரோப்பிய நாடுகளுக்கு 25 டாலர் (ரூ.2,300), வட அமெரிக்காவுக்கு, 50 டாலர் (ரூ.4,594), ஆஸ்திரேலியாவுக்கு 50 டாலர் (ரூ.4,594) கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
3-ம் கட்டமாக, ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா செல்லும் ஏர் இந்தியா விமானங்களுக்கான கட்டண உயர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை தொடர்ந்து, மற்ற நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதால், விமானப் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Ad Space
Ad Space