தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறி வருகிறது. முன்னாள் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய அதே சொகுசு வாகன கலாசாரத்தையே தற்போதைய ஆட்சியாளர்களும் பின்பற்றி வருவதோடு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாமல் மக்கள் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு தனது இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றதென சர்வஜன அதிகாரம் கட்சியின் ஊடகச் செயலாளர் ஹசன் அலால்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்
தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்களை பயன்படுத்தப்போவதில்லை என ஆரம்பத்தில் கூறினார்கள். ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை. ஒரு லீட்டர் எரிபொருளில் நான்கு கிலோமீட்டர் மாத்திரமே பயணிக்கக்கூடிய வி-8 ரக வாகனங்களில் அமைச்சர்கள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மிகவும் சொகுசாக பயணிக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் பழைய ஆட்சியாளர்களின் சொகுசு வாகனங்களை பயன்படுத்த மாட்டோம் என்றும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோம் என்றும் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த வாக்குறுதிகளை மீறி வருகின்றனர்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையமானது ஈரானிய மசகு எண்ணெய்க்கு ஏற்றவாறே வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெயை கொண்டு வந்தாலும் அதனை எமது சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்க முடியாது.
இதனால் அதிக செலவில் சுத்திகரிக்கப்பட்ட டீசல் மற்றும் பெட்ரோலை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறான முறையற்ற முகாமைத்துவத்தினால் மக்கள் மீது பாரிய சுமை ஏற்றப்பட்டுள்ளது.
அதேபோன்று தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச கடல் எல்லையில் இடம்பெறும் மோதல்கள் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. நாட்டின் சுகாதாரத்துறையும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
Beaches & Islands
அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளர்கள் மருந்துகளை வெளி மருந்தகங்களில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இவ்வாறான அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கம் மக்கள் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு தனது இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது என்றார்.
இன,மத வாதங்களை தூண்டி இருப்பை தக்கவைக்க அரசாங்கம் முயற்சி - சர்வஜன அதிகாரம் குற்றச்சாட்டு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space