சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து நாட்டினுள் இணையவழி பண மோசடியில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் 147 பேர் அடங்கிய குழுவொன்றை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வியாழக்கிழமை அன்று (2) கைது செய்திருந்தனர்.
சிலாபம், அம்பகதவில, இரணவில பகுதியிரல் அமைந்துள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றைக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீனப் பிரஜைகளால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டவர் குழு கணினி தொடர்பான பயிற்சிகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர். எனினும், அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் அசாதாரண செயற்பாடுகளில் சந்தேகமடைந்த பிரதேச மக்கள் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவலளித்துள்ளனர்
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றிருந்த தகவலுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த ஹோட்டலைச் சுற்றிவளைத்து விசேட சோதனை நடவடிக்கைகளளை முன்னெடுத்தனர். இந்தச் சுற்றிவளைப்பின் ஹொட்டலில் தங்கியிருந்த 147 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் சீனா, வியட்னாம், தாய்வான், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது ஹோட்டலில் இருந்த சில சீனப் பிரஜைகள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பியோட முயற்சித்துள்ளதுடன், இதன்போது காயமடைந்த இரு சீனப் பிரஜைகள் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, இணையவழி நிதி மோசடிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 143 மடிக்கணினிகள்), 120 கணினிகள் மற்றும் 370 கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் குறித்த ஹோட்டலிலேயே தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட மின்னணு உபகரணங்கள் மேலதிக ஆய்வுகளுக்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இணையவழி பண மோசடி ; 147 வெளிநாட்டவர்கள் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space