இரத்தினபுரி மாவட்டம், அயகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிடகந்த கிராம மக்கள், இடி மின்னல் தாக்கங்களினால் தொடர்ச்சியான உயிரிழப்பு அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்த மலைப்பாங்கான கிராமத்தில், தேயிலை, கறுவா மற்றும் கோப்பிப் பயிர்ச்செய்கை பிரதான வாழ்வாதாரமாக உள்ளது. இதன் மூலம் மக்கள் பொருளாதார ரீதியாக ஓரளவு முன்னேற்றமடைந்த நிலையில் இருந்தாலும், இயற்கையின் சீற்றத்தால் அவர்கள் நிம்மதியிழந்துள்ளனர்.
பிடகந்த கிராமத்தில் மின்னல் தாக்கம் என்பது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. இதுவரை இப்பகுதியில் மின்னல் தாக்கம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ் - சிங்களப் புத்தாண்டு பிறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் ஒருவர் உயிரிழந்துடன் வியாழக்கிழமை (23) கிராமத்தின் விகாரை மீது மின்னல் தாக்கியதில், அதன் விகாராதிபதி காயமடைந்து அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிராம மக்களின் கூற்றுப்படி,
இடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகாத வீடுகளோ, பொது இடங்களோ அங்கு இல்லை. பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என அனைத்து இடங்களும் தொடர்ச்சியாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கக் கிராமத்தின் உயரமான பகுதிகளில் மின்னல் கடத்திகளை பொருத்தித் தருமாறு பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொடரும் உயிரிழப்புகளைத் தடுக்க, அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுத் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிடகந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடி மின்னல் அச்சத்தில் பிடகந்த கிராமம்: இதுவரை 8 பேர் உயிரிழப்பு - பாதுகாப்பை கோரும் மக்கள்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space