கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், சாரதிகளை அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றைச் செலுத்திய 6 இளைஞர்கள் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை (30) அதிகாலை வேளையில், வாகனங்களின் முன்பக்கச் சக்கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தியவாறும், பெரும் சத்தத்தை எழுப்பியவாறும் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்த வாகனங்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் கந்தானை, படகம பகுதியைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான 6 பேரில் 4 பேரிடம் முறையான சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை என்பதுடன், அவர்கள் பயன்படுத்திய எந்தவொரு வாகனத்திலும் இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் அனைவரும் இன்று காலை ராகம சட்டவைத்திய அதிகாரியிடம் மருத்துவப் பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்கள் அனைவரும் விபத்து நேர்ந்த வேளையில் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தமை மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய 6 இளைஞர்கள் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space