தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் (ஆசியான்) கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும், நோக்கங்களை அடைந்துகொள்வதற்குமான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பதாக அதன் உயர்மட்டப்பிரதிநிதிகள் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் பிராந்திய மட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மணிலாவில் கடந்த வாரம் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் பிராந்திய மட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தில் இலங்கை சார்பில் கலந்துகொண்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே.லெனகல தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தென்கிழக்காசியப் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான கலந்துரையாடல், பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பல், இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு என்பவற்றுக்கான முக்கிய தளமாக தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவு விளங்குவதாக சுட்டிக்காட்டினர்.
அதுமாத்திரமன்றி தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும், நோக்கங்களை அடைந்துகொள்வதற்குமான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை இலங்கையின் பிரதிநிதிகள் இதன்போது மீளுறுதிப்படுத்தினர்.
அத்தோடு 2007 ஆம் ஆண்டு இக்கூட்டிணைவில் இலங்கையின் பங்களிப்பு எவ்வாறிருந்தது என்பது பற்றி நினைவுகூர்ந்த பிரதிநிதிகள், இந்தக் கூட்டிணைவில் 'துறைசார் கலந்துரையாடல் பங்காளராக' இணைந்துகொள்வதிலும், வலுவான ஒத்துழைப்பைப் பேணுவதிலும் இலங்கை மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக எடுத்துரைத்தனர்.
அதேபோன்று அணுவாயுதப் பாவனைத் தடை மற்றும் ஆயுதப் பரிகரணம், பாதுகாப்புக் கல்வி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கூட்டங்களை நடாத்துதல் உள்ளடங்கலாக 2023 - 2026 வரையான காலப்பகுதியில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் நடவடிக்கைகளுக்கு இலங்கை வழங்கிய பங்களிப்பு குறித்தும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
மேலும் மோதல் முகாமைத்துவம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் தமக்கு உள்ள அனுபவத்தின் அடிப்படையில், 2026 - 2029 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 'தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் அமைதிகாக்கும் நிபுணர்கள் மாநாட்டுக்கு' இணைத்தலைமை தாங்குவதில் இலங்கை ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆசியான் (ASEAN) கொள்கைகளை வலுப்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும்: மணிலா கூட்டத்தில் பிரகடனம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space