அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பொதுநலவாய வங்கி, மேரி-ஆன் வில்லியம்ஸை தனது முதன்மை செயற்கை நுண்ணறிவு (AI) விஞ்ஞானியாக நியமித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் வங்கியியல் வரலாற்றில் இத்தகைய உயரிய பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஏஐ நிறுவனத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த மேரி-ஆன், விரைவில் இந்த புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
ரோபாட்டிக்ஸ், உலகளாவிய தொழில்துறை கூட்டாண்மை, புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஆலோசனை மற்றும் வணிகம், அரசு, சமூகம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் நடைமுறை பயன்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் மேரி-ஆன் வில்லியம்ஸ் பல்லாண்டுகால அனுபவம் மற்றும் நிபுணத்துவம் பெற்றவர் என்று அவுஸ்திரேலியா பொதுநலவாய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராட்டியுள்ளது.
தனது புதிய நியமனம் குறித்துப் பேசிய மேரி-ஆன், வங்கியின் ஏஐ விஞ்ஞானிகள் குழுவை வழிநடத்தவுள்ளதாகவும், சமூகத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள் குறித்த புரிதலை மேம்படுத்துவதிலும், பொறுப்பான முறையில் ஏஐ கண்டுபிடிப்புகளை வங்கியில் தொடர்ந்து செயல்படுத்துவதிலும் தனது கவனம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆந்த்ரோபிக், அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஓபன்ஏஐ போன்ற முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பொதுநலவாய வங்கி ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வரும் நிலையில், இந்த புதிய நியமனம் வங்கியின் ஏஐ உத்திகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா பொதுநலவாய வங்கிக்கு முதன்மை செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானி நியமனம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space