நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்கான தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 'குவோ வரண்டோ' (Quo Warranto) ரிட் மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கு வியாழக்கிழமை (2) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், நீதியரசர்கள் அமர்வு முழுமையாக காணப்படாத காரணத்தினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷத ஹேரத் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அரசாங்க மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வந்துகொண்டிருந்த போதே, கடந்த பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அரசாங்க சேவையிலிருந்து இராஜினாமா செய்யாமல் வேட்புமனுத் தாக்கல் செய்தமையானது பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு சட்டப்பூர்வமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் உரிமை இல்லையென அறிவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரரின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கைக்கு அமைய, நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் திகதி எடுத்துக்கொள்ளவுள்ளதோடு அன்றைய தினம் முதன்மை வழக்காக இதனை விசாரணை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி என்.கே.அஷோக்பரனுடன் ஷெனல் பெர்னாண்டோ முன்னிலையாகியிருந்த அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி சேனானி தயாரத்னவுடன் நிஷாதி விக்கிரமசிங்க முன்னிலையாகியிருந்தார். அரசாங்கத் தரப்பு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜயசிங்க முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 31இல் - மேன்முறையீட்டு நீதிமன்றம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space