அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், வடகொரியா இதனை தமது நாட்டிற்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை எனக் கண்டித்து, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ எனும் அதிநவீன போர்க்கப்பலில் இருந்து கடந்த 11 ஆம் திகதி குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டு, கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாகச் சேதப்படுத்தியது. இந்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ உடன் நேரில் பார்வையிட்டார்.
சோதனைக்குப் பிறகு கிம் ஜாங் உன் கூறுகையில், "நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்துள்ளது" என்று எச்சரித்தார்.
இதையடுத்து, அமெரிக்கா – தென்கொரியா நடத்தும் வருடாந்திர இராணுவ பயிற்சியை கண்டித்து, ஜப்பான் கடற்பகுதியை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்ததன்படி, ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடலில் விழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனை மதிப்பிடவும், ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும், ஜப்பான் பிரதமரின் அவசர முகாமைத்துவ மையம் சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
வடகொரியாவின் இந்த சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ தொடங்கியுள்ளன, மற்றும் வடகொரிய-தென் கொரியா-அமெரிக்கா இடையேயான பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம், உலக அரங்கில் கொரியாவின் பாதுகாப்பு நிலை மற்றும் வடகொரியா – தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இராணுவ உறவுகள் மீண்டும் பரபரப்பாக மாறியுள்ளதை காட்டுகிறது.
அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம் ஷீல்ட்’ பயிற்சிக்கு பதிலடி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space