இஸ்லாம் மதம் மற்றும் முஹம்மது நபி அவர்களைப் பற்றி அவமதிக்கும் வகையிலான பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதற்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த தமிழ் இளைஞருக்கு மன்னிப்பு வழங்கி அவரைக் காப்பாற்றுமாறு இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட, செப்டம்பர் 16ஆம் திகதியன்று, அரபு மொழியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் பிரதியையும் அதன் தோராயமான ஆங்கில மொழிபெயர்ப்பையும்  இலங்கை வெளிவிவகார அமைச்சு அவரது தந்தைக்கு அனுப்பியுள்ளது.எனினும், குடும்ப உறுப்பினர்கள் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தமிழ் மொழிபெயர்ப்பு எதுவும் அதனுடன் அனுப்பப்படவில்லை.அனோஜன் வெளியிட்டதாகக் கூறப்படும் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுக்காக முதலில் விதிக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனையும், 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும், அந்நாட்டின் சைபர் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையாகும்.அம்பாறை, கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த தந்தை தம்பிராசா சிவராசா மற்றும் தாய் யோகலெச்சுமி சிவராசா  ஆகியோர் சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமது மகனை விடுவிப்பதற்காக இரு நாடுகளின் அதிகாரிகளும் கருணையுடன் செயற்பட வேண்டும் என  கண்ணீர் மல்க ஊடகங்கள் ஊடாக, கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவராசா அனோஜனுக்கு அல் அஹ்சா குற்றவியல் நீதிமன்றத்தினால் (Al-Ahsa Criminal Court) முதலில் ஐந்து வருட சிறைத்தண்டனையும், 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் ஜூலை 15ஆம் திகதி விதிக்கப்பட்டிருந்தது. எனினும், மேல்முறையீட்டுக்குப் பின்னர் தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அனோஜன் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக யோகலெச்சுமி சிவராசா கூறுகிறார்.அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலைமையை “நெருக்கமாகக் கூர்ந்து கவனித்து வருவதாக” வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும், மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து அந்த அறிக்கையில் எவ்விதக் குறிப்பும் இடம்பெறவில்லை.சிவராசா குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு திரட்டிக் கொடுத்த 18 இலட்சம் ரூபாயைப் பயன்படுத்தி, இலங்கை அரசினால் பணியமர்த்தப்பட்ட சவுதி அரேபியாவின் ஹிஸ்ன் அலன்சிமா (hisn alanzimah Company for Lawyership and Legal Consutations) தனிநபர் நிறுவனத்தின் சட்டத்தரணி அத்லான் அப்துல்லா அல் சுபே (Attorney Adlan Abdullah Al-Subaie) தாக்கல் செய்த இரண்டு பக்கங்களைக் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், சம்பந்தப்பட்ட இரண்டு அதிகபட்ச தண்டனைகளையும் ஒரே நேரத்தில் விதிப்பது செய்த குற்றத்திற்கு சமனானதா? என்பதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.தனது கட்சிக்காரர் தான் செய்த செயலின் தீவிரத்தன்மையையோ அல்லது அதன் குற்றத்தன்மையையோ மறுக்கவில்லை எனக் குறிப்பிடும் சட்டத்தரணி, அவர் மதத்தின் புனிதத்தன்மையை இழிவுபடுத்த முயற்சிக்கவில்லை என்றும், தான் செய்த குற்றத்தின் தீவிரத்தன்மையைக் குறைத்து மதிப்பிட முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், சட்டத்தரணி சுட்டிக்காட்டுவதற்கு அமைய, ஷரியா சட்டத்தில் ‘தாஸீர்’ எனப்படும் கொள்கையின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்போது, அதன் நோக்கம் தடுப்பு மற்றும் மறுவாழ்வை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், தண்டனை வழங்குவது, இறுதியில் சட்டத்தின் நோக்கத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்துவது பொருத்தமற்றதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.பேஸ்புக் பதிவை வெளியிட்டது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறின்போது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவே என அனோஜன் தெரிவித்ததாக முதல் வழக்கு விசாரணையின்போது கூறப்பட்டுள்ளது. அந்தப் பதிவை வெளியிட்ட 10 நிமிடங்களுக்குள் அதனை நீக்கிவிட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.“பதிவை உடனடியாக நீக்கியதன் மூலம், எனது கட்சிக்காரர் அதனை தொடர்ந்து வெளியிடவோ அல்லது மீண்டும் பதிவிடவோ இல்லை என்பது தெளிவாகிறது. மேலும், அந்தப் பதிவு மேலும் பரவுவதற்கு வழிவகுக்கும் வகையில், அதனை வேண்டுமென்றே நீண்ட காலத்திற்கு வைத்திருக்கவும் அவர் முயற்சிக்கவில்லை,” என சட்டத்தரணி அல் சுபே வாதிட்டுள்ளார்.பிரச்சினைக்கு தொடர்புடைய ஒரே ஒரு பதிவை மட்டுமே அனோஜன் வெளியிட்டுள்ளதாகவும், அதற்கு முன்னர் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதில்லை என்றும், அவரது பேஸ்புன் கணக்கு இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டதல்ல எனவும் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னர் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாத தனது கட்சிக்காரரின் நிலைமையை கருத்திற்கொண்டு, ஐந்து வருட சிறைத்தண்டனையை தளர்த்துமாறும், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அபராதத் தொகையை கணிசமாகக் குறைக்குமாறும் சட்டத்தரணி அத்லான் அப்துல்லா அல் சுபே தனது மேல்முறையீட்டின் மூலம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.மரண தண்டனை இன்றுவரை இரத்து செய்யப்படாத நிலையில், இலங்கையின், முன்னாள் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யூ.எம். அலி சப்ரி சமூக ஊடகங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், அமைச்சின் உத்தியோகபூர்வ எழுத்துமூலத் அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.“இவ்வாறான ஒரு செயலுக்காக மனித உயிரைப் பறிப்பது முற்றிலும் சாதாரணமற்றதும், மனிதாபிமானமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாதத செயலாகும்,” என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், அனோஜனின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார்.முஸ்லிம் தலைவர் அங்கு சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு, சவுதி அரேபியாவில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகமும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவமதிப்புக்குரிய பதிவொன்றுக்காக ஐந்து வருட சிறைத்தண்டனை விதிப்பதே அதிகமான தண்டனையாகும் என்றும், அவ்வாறான செயலொன்றுக்காக ஒருவரின் உயிரைப் பறிப்பது முற்றிலும் மனிதாபிமானமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அனோஜன் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பல முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது என்றும், அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தமது பதிவுகள் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்குவதற்கும் விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் மிக உயர் இராஜதந்திர மட்டத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களும் வலியுறுத்தியுள்ளார்.அனோஜனின் மேல்முறையீட்டு நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு கையாண்ட விதம் தொடர்பாக அரசாங்கத்திடம் பதில் கோரும் நோக்கில், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.