உடலில் திடீரென திட்டுத்திட்டாக சிவந்த நிறமா?

செவ்வாய் ஏப்ரல் 28, 2020

உடலில் திடீரென திட்டுத்திட்டாக சிவந்த நிறமாக இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக இருக்கலாம் என்று காய்ச்சல், சளித்தொல்லை, வறட்டு இருமல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் சோர்வு ஆகியவற்றை உலக தொற்று நோய்த்துறை மருத்துவர்கள் தற்போது வரை கூறி வருகின்றனர்.

என்றபோதிலும், கொரோனா நோயாளிகளை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே இந்நோய் தொற்றை மருத்துவர்களால் உறுதி செய்ய முடிகிறது. ஏனென்றால் 80 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு அதன் அறிகுறி வெளிப்படையாக தெரிவதில்லை.

இதேபோல், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாசனை நுகர்வு திறன், சுவை அறியும் தன்மை போன்றவற்றை இழந்து காணப்படுவதும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வில் தெரிய வந்தது.

இந்த நிலையில், இத்தாலிய மருத்துவ நிபுணர்கள் கொரோனா நோயாளிகள் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதில், கொரோனா நோயை வெளிக்காட்டும் மற்றொரு அறிகுறியை அவர்கள் கண்டறிந்தனர். அதாவது, கொரோனவால் பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு உடலில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக தடித்த சிவந்த நிறம் தென்பட்டு உள்ளது.

“இது, தோல் அரிப்பாலோ அல்லது ஒவ்வாமையாலோ ஏற்பட்டது இல்லை. இந்த அறிகுறிகள் தென்பட்ட பிறகே 2, 3 நாட்கள் கழித்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உருவாகி இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம்” என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், “கொரோனா நோயாளிகளின் உடலில் இந்த மாற்றம் திடீரென ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு அவர்களுக்கு அப்படி ஏற்பட்டதில்லை. உடலில் தடிப்புகள் உருவான கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது.

இதை இன்னும் விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். பொதுமக்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களிடம் இதுபோன்று ஏற்படும் திடீர் அறிகுறிகளை நன்கு கவனிக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகின்றனர்.