ஊதிப் பெருத்த பெருச்சாளி!!

செவ்வாய் அக்டோபர் 15, 2019

சிறீலங்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. தமிழ் மக்கள் வாக்களித்தாலென்ன, வாக்களிக்காமல் விட்டாலென்ன பெளத்த மதத்தை தாங்கிப்பிடிக்கக்கூடிய சிங்களப் பேரினவாத சிந்தனைகொண்ட ஒருவரே சிறீலங்காவின் ஜனாதிபதியாக வருவார் என்பதற்கு இங்கு மாற்றுக்கருத்தில்லை.

இவர்களில் யார் வென்று ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்துகொண்டும், தமிழ்க் கட்சிகள் சிலவும், சிங்கள அரசியல் தலைமைகளுக்கான தமிழ் எடுபிடிகளும் தேர்தல் களத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதில் களமிறங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த பத்து வருடங்களில் சிங்கள தேசத்தின் இரு பெரும் பிரதான கட்சிகளும் அதிகாரப் பதவியில் இருந்துள்ளபோதும், தமிழ் மக்களுக்கு சாதகமான எதுவும் நடந்து விடவில்லை. இனிமேல் பதவிக்கு வந்து தமிழ் மக்களுக்கு ஏதேனும் செய்வார்கள் என்று நம்புவதைப்போன்ற மடமைத்தன மும் இங்கு வேறில்லை.

இருந்தாலும் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை வேட்டையாட முடியும் என்ற நம்பிக்கையில் இவர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்தவேளையில், அண்மையில் உலகளவில் வெளியான ஓர் ஆய்வறிக்கை அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. உலகளவில் ஒவ்வொரு நாடும் தமது படைபலத்தைப் பெருக்குவதில் மிகக் கவனம் செலுத்துகின்றன.

குறிப்பாக இந்தியா, சீனா, சவுதி அரேபியா உட்படப் பல நாடுகள் தங்கள் படைபலத்தைப் பெருக்குவதில் மிக அதிகளவில் செலவு செய்கின்றன. இந்நாடுகள் தங்கள் படைத்தைப் பெருக்குவதற்கு முக்கிய காரணம், அயலில் உள்ள நாடுகளால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காகவே இருக்கின்றது.

ஆனால், அயல் நாடுகள் எதுவுமற்ற, வேறு நாடுகளால் ஆபத்துக்கள் வரும் என்று எதிர்பார்க்கமுடியாத சிறீலங்கா தன் படைபலத்தை ஊதிப் பெருக்கி வைத்திருப்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

தமிழ் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் இருக்கும் படை முகாம்களினதும் படைகளினதும் எண்ணிக்கையக் குறைக்குமாறு பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்காவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தமது நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேறி அவற்றை மீளத் தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழ் மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.

ஆனால், கடந்த பத்து வருடங்களாக தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவ முகாம்களையோ ஏன் இராணுவத்தின் எண்ணிக்கையையோ குறைப்பதற்கு சிறீலங்கா ஆட்சியாளர்கள் எவரும் முன்வரவில்லை. மாறாக குறைக்க மாட்டோம் என்றும் ஆணித்தரமாகக் கூறிவருகின்றனர்.

உலக மக்கள் தொகையில் 57வது இடத்தில் (2 கோடியே 25 இலட்சம்) இலங்கை இருக்கின்றது. ஆனால் உலகில் இராணுவ எண்ணிக்கையை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 19வது இடத்தில் சிறீலங்கா இருப்பதாக Global Firepower (உலகளாவிய நெருப்புசக்தி) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டிற்கான உலக இராணுவ பலப் பட்டியல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

111

அதாவது, வல்லரசு நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியாவைவிட அதிக படையினரைச் சிறீலங்கா கொண்டிருக்கின்றது.

அந்த அறிக்கையின்படி, சிறீலங்காவில் 281,000 இராணுவப் படையினர் சேவையில் உள்ளனர். அத்துடன் சிறீலங்காவிடம், 76 போர் விமானங்களும், 55 உலங்குவானுVர்திகளும் உள்ளன. சிறீலங்காவின் தரைப்படைகளிடம், 210 போர் டாங்கிகள், 570 கவச சண்டை வாகனங்கள், 185 ஆட்டிலறிப் பீரங்கிகள், 22 பல்குழல் எறிகணைச் செலுத்திகள் உள்ளன. அத்துடன் கடற்படையிடம் 40 போர்க் கப்பல்கள் உள்ளன என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மரபுவழி ஆயுதங்களுடன் கடல், தரை, வான் வழியாக ஒவ்வொரு நாட்டினதும், போரிடக் கூடிய திறனின் அடிப்
படையில் Global Firepower அமைப்பால் உலக இராணுவ பலம் குறித்த நாடுகளின் இந்த தரவரிசை பட்டியலிடப்பட்டுள்ளது.

உலகின் 137 நாடுகளைக் கொண்ட இந்த தரவரிசையில், சிறீலங்கா இனப்படு கொலை இராணுவத்தின் பலம் 90வது இடத்தில் உள்ளது. நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மிக அதிக இராணுவத்தைக் கொண்ட நாடுகளில் 19வது இடத்தில் சிறீலங்கா இருக்கின்றது (2 இலட்சத்து 45 ஆயிரம் படையினர் நடவடிக்கையில்), இதில் முதல் இடத்தில் சீனாவும் (21 இலட்சத்து 83 ஆயிரம் படையினர்), இரண்டாவது இடத்தில் இந்தியா (13 இலட்சத்து 62 ஆயிரம் படையினர்) உள்ளது.

அதேவேளை, வல்லரசு நாடுகளான பிரான்ஸ் சிறீலங்காவினை விடக் குறைந்த படையினருடன் 22வது இடத்திலும் (2 இலட்சத்து 5 ஆயிரம் படையினர்), பிரித்தானியா 32வது இடத்திலும் (1 இலட்சத்து 50 ஆயிரம் படையினர்) இருக்கின்றன என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தென் ஆசியாவில் ஐந்தாவது பலம் கொண்ட இராணுவ நாடாக சிறீலங்கா இருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை அடுத்து, சிறீலங்கா இனப்படுகொலை இராணுவமே மிகப் பெரியதாக இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக சிறீலங்கா தனது இராணுவ பூதத்தை ஊதிப் பெரிதாக்கியே வைத்திருக்கின்றது.

சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தினரில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

போர் முடிவடைந்து விட்டதாகக் கூறப்பட்ட 2010ம் ஆண்டு சிறீலங்காவின் பாதுகாப்புச் செலவீனம் 1552 பில்லியன் ரூபாக்கள். முன்னர் வாங்கிய ஆயுதங்களுக்கான கொடுப்பனவே பாதுகாப்புச் செலவினம் அதிகரிப்பதற்கு காரணம் என்று அப்போது மகிந்த தரப்பால் கூறப்பட்டது. ஆனால் மைத்திரிபால சிறீசேனவின் ஆட்சியில் 2019ம் ஆண்டுக்கான அதன் பாதுகாப்புச் செலவீனம் 4087 பில்லியன் ரூபாக்கள். அதாவது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செலவு கூடியுள்ளது.

போர் காலத்திலும் பார்க்க சிறீலங்காவின் பாதுகாப்பு செலவீனங்கள் தொடர்ந்தும் அதிகரித்தே செல்கின்றன.

இதில் கடந்த ஐந்து வருடங்கள் இந்த உலகத்தால் தமிழருக்குச் சொல்லப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் பதவி வகித்தது என்பதும் இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தீவில் தமிழர்கள் இருக்கும் வரை, வடக்கு - கிழக்கு தமிழர் தாயகமென தமிழ் மக்கள் உரிமை கொண்டாடிக்கொண்டு இருக்கும் வரை இலங்கைத் தீவில் தமது இராணுவத்தின் எண்ணிக்கையை சிறீலங்கா குறைக்கப்போவதில்லை அதன் பாதுகாப்புச் செலவினமும் குறையப்போவதில்லை. ஏன் தமிழர்களுக்கு நிம்மதி
யான, சுதந்திரமான வாழ்வும் கிடைக்கப்போவதில்லை.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு