தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி போராட்டம்!

திங்கள் அக்டோபர் 21, 2019

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி லண்டனில் உள்ள உள்துறை அமைச்சினை முற்றுகையிட்டு பிரித்தானிய வாழ் தமிழர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

தமிழ் மாணவர் ஒருவரின் தஞ்சக் கோரிக்கை  அரசாங்கத்தால் மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அடுத்தே இந்த எதிர்ப்பு போராட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “இலங்கை பாதுகாப்பற்றது, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானியா அரசு தொடர்ந்தும் நாடு கடத்தினால் இலங்கையில் அவர்களுக்கு மரணதண்டனை கூட வழங்கப்படலாம்”

மேலும் “இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் எங்கள் குடும்பங்களை சித்திரவதை செய்வார்கள், பாலியல் பலாத்காரம் செய்வார்கள் அல்லது காணாமல் ஆக்கப்படுவார்கள் என்பதை பிரித்தானிய அரசு அறிந்துகொள்ள வேண்டும்.

அத்தோடு “இலங்கை சொர்க்கம் அல்ல. வெள்ளை வான் கடத்தல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை, தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படும் ஒரு நரகம்” என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்தது. இதன்போது மேற்கொண்ட விசாரணைகளின் படி அறிக்கை வெளியிட்டிருந்த அந்த ஆணைக்குழு, “சாட்சியம் பெற்றபின்னர், திரும்பி வந்த பலர் தாக்கப்பட்டதுடன் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

அத்தோடு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியமை தொடர்பான குற்றங்களுக்காக அவர்கள் மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில் 2015-17 காலகட்டத்தில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறும் 76 தமிழர்களிடமிருந்து சர்வதேச, உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு அறிக்கைகளை பெற்றுக்கொண்டது. இதன்போது பாலியல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.