பிரான்ஸ் கடற்கரையில் தினம் வந்து குவியும் போதைப்பொருட்கள்!

வெள்ளி நவம்பர் 15, 2019

பிரான்ஸ் நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஒரு வாரமாக தினமும் கரைக்கு வந்து அடையும் கொக்கைன் போதை மருந்துகளால் புலன் விசாரணையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் மேற்கு பகுதியில் உள்ள நாண்டெஸ் நகர் முதல் தெற்கே ஸ்பெயின் எல்லைக்கு அருகிலுள்ள ரிசார்ட்  நகரமான பியாரிட்ஸ் வரை 300 மைல் தொலைவில் உள்ள கடற்கரைகளில் கடந்த ஒரு வாரமாக போதை மருந்து பொட்டலங்கள் வந்து அடைகின்றன. அந்த பொட்டலங்கள் எங்கிருந்து வந்தடைகின்றன என தெரியாமல் அதிகாரிகள் குழம்பி வருகின்றனர். 

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இதுவரை 870 கிலோ அளவிலான போதை மருந்துகள் கரையை வந்தடைந்துள்ளன,  அவற்றின் மதிப்பு 92 மில்லியன் டாலர்களாகும் (இந்திய மதிப்பில் சுமார் 662 கோடி ரூபாயாகும்).

அவற்றை சோதனை செய்ததில் 83 சதவீத தூய்மையான கொக்கைன் போதை மருந்துகள் என தெரிய வந்துள்ளது. அதிக அளவில்  உட்கொண்டால் உடனடியாக மரணத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு ஆபத்தானது. 

10-க்கும் மேற்பட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்  காவல் துறையினர்  அந்த பகுதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

போதைமருந்துகள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்டறிய ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் யு.எஸ். போதைப்பொருள் அமலாக்க  நிறுவனத்துடன் இணைந்து புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  

‘ஒருவேளை இந்த போதை மருந்துகள் தென் அமெரிக்கா கடல் பகுதிகளில் புயலால் தாக்கப்பட்ட கப்பலில் இருந்து  வெளியேறியிருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’, என அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஏற்பட்ட டொரியன் சூறாவளிக்குப் பின்னர் புளோரிடாவில் உள்ள கடற்கரைகளிலும்  இதேபோன்ற அடையாளங்களைக் கொண்ட கொக்கைன் போதை மருந்துகள் காணப்பட்டன என்று பிரெஞ்சு செய்தித்தாள் ஒன்று  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.