கடற்புலி லெப்.கேணல் கடாபியின் வீரவணக்க நாள்!!

வெள்ளி மே 08, 2020

திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கடந்த 2008.05.10 அன்று நடைபெற்ற லெப்.கேணல் கடாபியின் வீரவணக்கக் கூட்டத்தில் வீரவணக்க உரையாற்றிய கேணல் சூசை மேலும் தெரிவித்துள்ளதாவது:

15 ஆண்டுகளுக்கும் மேலாக எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழின விடுதலைக்காக பல்வேறு துறைகளில் உழைத்தவர் லெப். கேணல் கடாபி.

1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களமுனைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர்.

இவரின் திட்டமிடலாலும், பற்றினாலும் கடற்புலிகளின் முதன்மை இயந்திரப் பொறியியலாளராக நியமிக்கப்பட்ட இவர், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உள்ளத்தில் ஆழமாக இடம்பிடித்த ஒரு போராளி.

தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்பரப்பில் பயிற்சிப் படகுகளை பார்வையிடுவதிலும்,தலைவர் அருகிருந்து படகைச் செலுத்தும் இயந்திர வல்லுனராகவும் இருந்தார்.

இன்று அதிகாலை திருகோணமலையில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து கரும்புலி வீரர்களை வழியனுப்பியவர் கடாபி.

ஒரு காலை இழந்த போதிலும் தொடராக விடுதலைப் பயணத்திற்கு ஓய்வின்றி உழைத்த ஒரு விடுதலை வீரன் என்றார் அவர்.

கடற்புலி லெப். கேணல் கடாபி அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்,

தமிழீழத் தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.