ஈழத்தமிழ் இனப்படுகொலை; 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்திடுவீர்! வைகோ வேண்டுகோள்

சனி மே 16, 2020

ஈழத்தமிழ் இனப்படுகொலையை நினைகூறும் வகையில், ஆண்டுதோறும் மே திங்கள்17 ஆம் தேதியை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலையில், மே -17 இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் திருமுருகன் காந்தி அவர்கள் ஏற்பாட்டின் பேரில் சென்னை மெரினா கடற்கரையில் சுடர் ஏந்தி புகழ் அஞ்சலி நடத்துவது வழக்கம்.

கடந்த ஆண்டு அப்படி நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீதும், என் மீதும் மற்றும் மூவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

இந்த ஆண்டு கொரோனா கொடும் தொற்றுநோய் காரணமாக அந்தப் புகழ் அஞ்சலி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த இயலாமல் போயிற்று.

ஆயினும் மே -17 இயக்கத்தினர் தங்கள் இல்லங்களிலேயே சுடர் ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், உணர்வாளர்கள் அவ்விதமே தங்கள் இல்லங்களில் மே-17 அல்லது மே 18 நாட்களில் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்தி நிகழ்ச்சியை நடத்திடுமாறு வேண்டுகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை -8
16.05.2020