சீமான் ஜெயிலுக்கு போகட்டும்'-திருச்சி வேலுச்சாமி!

செவ்வாய் அக்டோபர் 22, 2019

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் திருச்சி வேலுச்சாமி. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக புத்தம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய அவர், பாஜகவின் சுப்பிரமணிய சுவாமியை ராஜீவ் கொலை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தியை தமிழர்கள் தான் கொன்றோம் என்கிற சீமானின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவரிடம், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அனல் பறக்கும் பதில்கள் வருமாறு,

ராஜூவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பாக பேசிய அவர் நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. எனவே, அதனை திரும்ப பெறும் பேச்சிக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன?

ராஜூவ் கொலைக்கு தமிழர்கள் தான் காரணம் என்று இதற்கு முன்பு சீமான் பேசாத நிலையில், தற்போது அவர் இவ்வாறு பேசுவதில் அரசியல் நோக்கம் இல்லாமல் இல்லை.

ராஜூவ் கொலை நடந்த அடுத்த நாளே லண்டனில் உள்ள புலிகளின் தலைமை அலுவலகத்தில் இருந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்த கிட்டு பெயரில் அறிக்கை வெளியானது. அதில், ராஜூவ் கொலையால் விடுதலைபுலிகள் இயக்கம் பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், எங்களின் பயணத்துக்கு அவர் உறுதுணையாக இருந்ததாகவும் அதில் தெரிவித்திருந்தனர்.

மேலும், விடுதலைப்புலிகள் பிரபாகரன் ஒரு முறை கூட ராஜூவ் காந்தியை புலிகள் தான் கொன்றார்கள் என்று சொன்னதில்லை. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றே பலமுறை கூறியுள்ளார்.

அதற்கான வீடியோ காட்சிகளும் உள்ளது. உண்மை இப்படி இருக்க, சீமான் மூன்று நாட்களுக்கு முன்பு பேசியதை தற்போது மாற்றி பேச வேண்டிய அவசியம் என்ன.

அதையும் தாண்டி ராஜூவ் காந்தி மே மாதம் 21ம் தேதி இரவு 10.15 மணிக்கு கொல்லப்படுகிறார். உடனடியாக அவர் கொல்லப்பட்ட இடத்தை காவல்துறையினர் பூட்டி சீல் வைக்கிறார்கள்.

பிறகு 23ம் தேதி காலை 9 மணிக்கு காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை தொடங்குகிறார்கள். ஆனால், 22ம் தேதி காலையில் வந்த பத்திரிகைகளில் எல்லாம் ராஜூவை புலிகள்தான் கொன்றார்கள் என்று அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி சொன்னதாக செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

விசாரணையே ஆரம்பிக்க படாத நிலையில், அவருக்கு புலிகள் கொன்றது எப்படி தெரிந்தது. அவரை ஏன் இந்த 29 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட சிபிஐ விசாரிக்கவில்லை.

உண்மை நிலை இப்படி இருக்க சீமான் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர் தமிழர்களை கொலைகாரர்கள் என்று சொல்கிறாரா? அவர் சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் என்பதே உண்மை. இந்த போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.