7 பேர் விடுதலை விவகாரம்- மோடிக்கு ரவிச்சந்திரன் கடிதம்!

வெள்ளி அக்டோபர் 18, 2019

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக பிரதமர் மோடிக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதி உள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக கவர்னர் 161-வது பிரிவின்கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் பிரோகித் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் மறுத்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிராகரிப்பை கவர்னர் பன்வாரிலால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் தனது முடிவை அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அரசின் முடிவை உடனடியாக கவனித்து, விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவன செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

8 சீக்கியப் போராளிகளை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதையும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதையும் வரவேற்பதாக ரவிச்சந்திரன் கூறியுள்ளார். 

7 தமிழர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ரவிச்சந்திரன்,  பஞ்சாப் - தமிழக அரசியல் கைதிகள் விடுதலை விஷயத்தில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாக கூறி உள்ளார். 

 

இந்த இரட்டை நிலை சரிசெய்யப்பட வேண்டும் என்றும், இந்தியா முழுவதும் இருக்கும் கைதிகளுக்கு சமமான நீதி வழங்க வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.