446 குடியிருப்புவாசிகளுக்கு மாற்று ஏற்பாடாக அடுக்குமாடி குடியிருப்பு

செப்டம்பர் 22, 2017

எண்ணூர் விரைவு சாலை அமைக்கும் திட்டத்தால் இடம் மாறும் 446 குடியிருப்புவாசிகளுக்கு மாற்று ஏற்பாடாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட துரித நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவொற்றியூர், நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் பகுதியில் எண்ணூர் விரைவு சாலை அமைக்கும் திட்டப்பணியை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அப்பகுதியில் வசித்து வந்த 446 குடியிருப்புகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்று ஏற்பாடாக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திருவொற்றியூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள தியாகராஜசுவாமி திருக்கோவிலுக்கு உடைமையான இடம் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடங்களை குடிசைமாற்று வாரியத்திற்கு உடனடியாக ஒப்படைப்பது தொடர்பாகவும், இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை துரிதப்படுத்துவதற்கும் மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் 21-ந் தேதியன்று (நேற்று) அவசர ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஷம்பு கல்லோலிகர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் மீன்வளத் துறை, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரும் அக்டோபர் முதல் வாரத்திற்குள் நிலத்திற்கான நுழைவு அனுமதி பெற்று, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோர துரித நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

செய்திகள்
புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!