350 தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடலில் மூழ்கி இறந்த விவகாரம் !

திங்கள் அக்டோபர் 21, 2019

2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை நோக்கிய படகு பயணத்தின் போது 350க்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் இறந்த விவகாரத்தில், மேதெம் ரதி என்ற 43 வயது ஈராக்கியரை ஆஸ்திரேலிய காவல்துறை கைது செய்துள்ளது. 

ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக கருதப்படும் இவர், நியூசிலாந்தில் இருந்த நிலையில் ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அயல்நாட்டிடம் குற்றவாளியை ஒப்படைக்கும் நடைமுறையின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு ஆட்கடத்தலை ஒருங்கிணைத்து நடத்தியவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். 

சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர், இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை ஆஸ்திரேலியாவின் ஆட்கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகின்றது.