விடுதலைப் புலிகளின் தோற்றமும், இந்தியா தேடவேண்டிய பரிகாரமும்


மே 10, 2013
 

இந்தப் பூமிப் பந்தில் மனித இனம் தோற்றம் பெற்று பலகோடி ஆண்டுகளாகின்ற போதிலும், தமிழர்கள் என்ற இனமும் இங்கே வசிக்கின்றதென்ற கருப்பொருள் உருவாகிய காலம் 1972 ஆம் ஆண்டுதான்.

ஏனெனில் அதுவரை அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் பெருமையை நிலைநாட்ட வல்வெட்டித்துறையிலிருந்து ஒரு சிறுவன் அன்றுதான் முகிழ்த்தெழுந்தான். தமிழர்களின் வரலாற்றை மட்டுமல்ல தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும் மாற்றியெழுதியவன் அந்தச் சிறுவன்தான்.

அவனின் பெயரை ஓரம்கட்டிவிட்டு தமிழர்களின் வரலாற்றை எழுதிவிட முடியாதளவிற்கு இன்று அந்தச் சிறுவன் வளர்ச்சி பெற்றுவிட்டான். அவனுக்கு பின்னர் தான் தமிழர் என்ற ஓர் இனம் இந்தப் பூமியில் வாழ்ந்தது, வாழ்கிறது என்று சர்வதேசம் உணர்ந்து கொண்டது.

இன்று தமிழர்களின் பிரச்சினை உலகம் பூராகவும் வியாபித்து நிற்பதற்கு அந்தச் சிறுவன் தான் காரண கர்த்தா. அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல. அவன்தான் எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் 1972 ஆண்டு தனது 17 ஆவது வயதில் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பை ஆரம்பித்தார். சிறீலங்கா படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட கொடுமைகளையும் அராஜகங்களையும் தாங்கிக்கொள்ள, பார்த்துக்கொண்டிருக்க முடியாத பிரபாகரன் என்ற சிறுவன் தனது வீட்டில் நின்ற வளர்ப்பு பசு மாட்டை விற்று அதனால் கிடைத்த பணத்தின் மூலம் ஒரு கைத்துப்பாக்கியை வாங்கி அந்தத் துப்பாக்கியின் உதவியுடனேயே எமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

அந்தப் போராட்டத்தில் பல இளைஞர்கள் பங்குகொண்டு தலைவருக்கு ஒத்துழைத்தனர். இந்த ஒத்துழைப்பால் புலிகள் அமைப்பு வளர்ந்தது. இந்த நிலையில்தான் தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பின் பெயரை மாற்றுவதற்கு முடிவெடுத்தார். அந்த மாற்றம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள். புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பு 1976 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னரே விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றதன் பின்னர்தான் உலகத் தமிழினமே விழித்துக்கொண்டது. எமக்கு என்றொரு தேசம், எமக்கென்றொரு கட்டமைப்பு, எமக்கென்றொரு படையணி என்றவாறு தமிழர் தாயகம் பெருமைகொண்டது. இந்தப் பெருமைகளைக் கண்டு உலகம் வியந்தது. உலகமே தமிழீழத்தை நோக்கி இறங்கி வந்தது. வல்லரசு நாடுகளே தமிழரின் கையை வந்து பற்றிக்கொண்டன. இதனைப் பார்த்த சிறீலங்கா எரிச்சலடைந்தது. இவைகளைப் பார்த்த இந்தியா பொறாமைப்பட்டது. தமக்கு அருகிலுள்ள தமிழீழத்தில் கடற்படை, தரைப்படை, வான்படை போன்ற படையணிகளை விடச் சிறந்த உயிர்க்கொடைப் போர்த் தந்திரோபாயங்களுடன் உலகத்திலேயே சிறந்த படையணி இருப்பதா என்று இந்தியா அச்சமடைந்தது.

தனது தேசியப் பாதுகாப்புக்கு புலிகளால் அச்சுறுத்தல் வருமென்று தேவையில்லாத கனவு கண்ட இந்தியாவின் சில அரசியல்வாதிகள் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்ககை காரணமாகவே இன்று புலிகள் அமைப்பின் கட்டுமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்கள் விடயத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் விடயத்திலும் தாங்கள் பாரிய தவறிழைத்திருப்பதை இந்தியா இப்போது உணர்ந்துகொண்டிருக்கின்ற போதிலும் எதையுமே அறியாததைப் போல அது தூங்கிக்கொண்டிருக்கிறது. தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்கள் போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது இந்தியாவைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம், வளர்ச்சி, செயற்பாடுகள் போன்ற அனைத்தையும் நேரடியாகவே அறிந்துகொண்ட இந்தியா புலிகளையும் போராட்டத்தையும் அழிக்க எடுத்துக்கொண்ட முடிவானது ஈழத் தமிழ் மக்களை மட்டுமன்றி உலகத் தமிழ் மக்களையும் பெரும் கவலையடையச் செய்துள்ளது.

இந்திய மத்திய அரசின் மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள களங்கத்தை எந்தக் கங்கையில் நீராடினாலும் இந்திய அரசியல்வாதிகள் நிவர்த்தி செய்ய முடியாது. ஆனால், ஈழத் தமிழருக்கு ஏற்படுத்திய அழிவின் பாவம் தங்களைப் பற்றிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமாயின் இந்தியா தற்போது கூட ஒரு விடயத்தைச் செயற்படுத்த முடியும். இப்போதும் காலம் கெட்டுவிடவில்லை. தமிழர் தாயகத்தில் போராட்டத்திற்கு முன்னர் இருந்த நிலையை விட தற்போதுதான் மிகப் பெரும் இன அழிப்பு நடைபெறுகின்றது. கல்வியும் மொழியும் பண்பாடும் நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் என்று தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போன்று எமது இனத்தின் கட்டமைப்புகளை அழிப்பதன் மூலம் எமது தாயகத்தைச் சிதைப்பதற்கு எதிரியானவன் முற்பட்டு வருகின்றனான்.

தென்னிலங்கை சிங்களவர்களை அள்ளிக்கொண்டுவந்து தமிழர் தாயகத்தில் குடியேற்றுவதன் மூலமும் தமிழர் தாயகத்திலுள்ள வெற்று நிலங்கள் மற்றும் புலம்பெயர் தமிழரின் நிலங்களை ஆக்கிரமித்து இராணுவ முகாம்கள் அமைப்பதன் மூலமும் தமிழர் தாயகத்தில் தனது இருப்பைத் தக்க வைப்பதற்கு சிங்கள அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. இந்தச் செயற்பாட்டை நாம் இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் தமிழர் தாயகம் என்று நாம் சொல்வதற்கான இடம் இருக்காது.

போராட்டத்தை நடத்துவதற்கும் இடம் இருக்காது. சிங்களவர்களுடன் இணங்கி வாழவும் முடியாமல் அவர்களை எதிர்க்கவும் முடியாமல் எமது மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட நேரிடும். கடந்த காலங்களில் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முற்பட்ட போது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழர்களை தொடர்ந்தும் நசித்தனர். அவர்களை தொடர்ந்தும் இரண்டாம்தரப் பிரசைகளாகவே நடத்தினர். இதனால் தான் விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது.

எனவே மீண்டும் இந்த நிலை வராமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது. தமிழர்களுக்கும் தமிழர்களின் பலம் வாய்ந்த போராட்ட அமைப்பின் அழிவுக்கும் காரண கர்த்தாவாக விளங்கிய இந்தியா தற்போது தமிழர்களுக்கு உதவுவதன் மூலம் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு பரிகாரம் தேட முடியும்.

அதாவது, தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ ஆக்கிரமிப்புகளையும் தடுத்து நிறுத்தவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் இந்தியாவிற்கு உள்ளது. சிறீலங்காவில் இத்தனை வருடகாலம் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற போதிலும் இந்த விடயத்தில் உலகத்தில் உள்ள எந்தவொரு நாடும் நடவடிக்கை எடுக்காமைக்கு முக்கிய காரணம் சிறீலங்காவிற்கு அருகில் ஒரு முக்கியமான வளர்ந்து வரும் வல்லரசு நாடாகிய இந்தியா இருக்கின்றமைதான்.

அயல் நாடாக இந்தியா இருக்கின்ற போது நாங்கள் ஏன் சிறீலங்காவின் பிரச்சினையில் தலையிட  வேண்டுமென்பதே உலக நாடுகளின் எண்ணப்பாடாகும். ஆனால் இந்தியாவானது ஈழத்தமிழர் விடயத்தில் உரிய அக்கறை எடுக்காமல் செயற்படுகின்றது. தமிழர்களை வேண்டாவெறுப்பாக நடத்துகின்றது. வெளிப்படையாகச் சொல்லப்போனால் தமிழர்கள் வாழ்ந்தால் என்ன மாண்டால் என்ன என்ற நிலைப்பாட்டுடனேயே இந்தியா செயற்படுகின்றது. இந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்கள்தான் தங்கள் நிரந்தர நண்பர்கள் என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும்.

சிறீலங்காவின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தாயகம். வரலாற்று ரீதியாக நிரூபிக்க முற்பட்டால் சிறீலங்கா முழுவதும் தமிழ் மக்களுக்கே சொந்தமானது. சிங்களக் காடேறியாகிய விஜயனும் அவனது 700 குண்டர்களும் இந்தத் தீவிற்கு வருகை தந்தபோது இங்கே தமிழர்களின் மூதாதையர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். விஜயனும் 700 பேரும் இந்தியாவிலிருந்து பெண்களை வரவழைத்து மிருகங்கள் போல வாழ்ந்தன் மூலம் தமது இனத்தைப் பெருக்கிக்கொண்டு அன்றைய காலத்திலேயே தமிழர்களை அடக்க முற்பட்டனர். அழிக்க முற்பட்டனர். இந்த தமிழின அழிப்பு இன்று வரை தொடர்கின்றது. இந்த அழிப்பிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற தார்மீக கடமையிலிருந்து மீண்டும் மீண்டும் இந்திய மத்திய அரசு பின்வாங்குமாயின், தவறிழைக்குமாயின் அது எதிர்காலத்தில் அவர்களுக்கு பெரும் பின்னடைவாக மாறும்.

இந்த உண்மையை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை சிங்களப் படைகள் ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதுடன் இராணுவ முகாம்களை அமைக்குமாயின் அது எதிர்காலத்தில் இந்திய மீனவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பெரும் ஆபத்தாக முடியும்.

இந்த விடயம் தொடர்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அமைதியாக இருக்கக்கூடாது. வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வருகின்ற காணி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகளும் உரிய அக்கறை எடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்பை நிறுத்துமாறு கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக தமிழகத்திலுள்ள வை.கோபாலசாமி, பழ.நெடுமாறன், அண்ணன் சீமான் உள்ளிட்ட அனைத்து தமிழின உணர்வாளர்களும் அவர்களுடன் மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து இந்த விடயத்தில் அதிக கவனமெடுக்க வேண்டும்.

மேலும், புலம்பெயர் தமிழ் மக்களும் காணி அபகரிப்புக்கு எதிராக தாங்கள் வசிக்கின்ற நாடுகளில் போராட்டங்களை முன்னெடுக்கு வேண்டும். இந்தப் போராட்டங்கள் வெறுமனே கண்துடைப்பு போராட்டங்களாக அன்றி உணர்ச்சிவசமான போராட்டங்களாக அன்றி காத்திரமான போராட்டங்களாக அமைய வேண்டும்.

உடனடி நடவடிக்கைக்கான போராட்டங்களாக அமைய வேண்டும். இப்போது தமிழர் தாயகத்திலுள்ள அவசரமானதும் அவசியமானதுமான இந்தப் பிரச்சினையை பார்த்துக்கொண்டும் நாம் அசட்டையீனமாக இருந்தால் இன்னும் சில வருடங்களில் நம் வீட்டு முற்றங்கள் கூட எங்களுக்கு சொந்தமாக இருக்காது. அங்கு கூட சிங்களப் படைகளின் காவலரண்களே அமைந்திருக்கும்.

- தாயகத்தில் இருந்து வீரமணி 

நன்றி: ஈழமுரசு