சேலம் விஜயராஜ் மறைவு - வைகோ இரங்கல்


செப் 18, 2012
 

இலங்கைத் தீவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நம் தொப்புழ் கொடி உறவுகளான ஈழத் தமிழ் மக்கள் குழந்தைகள் பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோரை ஈவு இரக்கமின்றி கோரமாகப் படுகொலை செய்த, சிங்கள இனவாத அரசின் அதிபர் கொடியவன் ராஜபக்சேவை இந்தியாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தற்போது மத்தியப் பிரதேசம் சாஞ்சியில் புத்தரின் தத்துவக் கல்வி நிலைய அடிக்கல் நாட்டுவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ள மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அரசைக் கண்டித்தும், ராஜபக்சே வருகையை எதிர்த்தும் உயிர்த் தியாகம் செய்வதென்று முடிவெடுத்து, சேலம் நகரில், 27 வயது நிரம்பிய, திருமணம் ஆகாத இளைஞன் விஜயராஜ் தன் உடலுக்குத் தீ வைத்து, நெருப்பிலே குளித்து பலியாகிவிட்டான் என்ற செய்தி, சாஞ்சியை நோக்கிப் பயனித்துகொண்டிருந்த வழியில் எனக்குக் கிடைத்தபோது, வேதனையிலும், அதிர்ச்சியிலும் என் இதயம் சுக்கல் நூறாகியது.

ஈழத் தமிழர் படுகொலைக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே முழுக்க முழுக்கக் காரணம் என்பதால், தியாக மாமணி விஜயராஜ், நீதிபதியிடம் கொடுத்த மரண வாக்குமூலத்தில், “இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் மீதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மீதும் நீதிமன்றத்தில் வழக்குப் போட வேண்டும்” என்று சரியான உண்மையான குற்றச்சாட்டை கூறி உள்ளார். தமிழ் நாட்டில், தியாக தீபங்களான முத்துக்குமார், செங்கொடி உள்ளிட்ட பதினேழு தன்மானத் தமிழர்கள் ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க, தங்களை மாய்த்துக்கொண்டு உயிர் நீத்தனர்.  சேலத்தில் தீக்குளித்து மாண்ட வீர இளைஞன் விஜயராஜ், ராஜபக்சே வருகையைத் தடுக்க, எதிர்ப்பைக் காட்ட தன்னையே உயிர்ப்பலி ஆக்கிக்கொள்ள முடிவுசெய்துவிட்டதாக ஏற்கனவே சில நாட்களாகச் சொல்லி வந்துள்ளார்.

இந்தத் தியாக இளைஞன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஏழைக் குடும்பத்துப் பிள்ளை ஆவார். ஆட்டோ ஓட்டும் தொழிலாளி ஆவார். விஜயராஜினுடைய சாவுக்கு மத்திய காங்கிரஸ் அரசும், மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அரசும் பொறுப்பாளிகள் ஆவார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.

தமிழக வாலிபர்களின் உள்ளம் எரிமலையாகி வருகிறது என்பதை, மத்திய காங்கிரஸ் அரசுக்கும், சிங்களக் கொலைகாரன் ராஜபக்சேவுக்கு வரவேற்புக் கொடுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.

எரியும் நெருப்பில் தன் மேனியைச் சாம்பலாக்கி உயிர் நீத்த தியாகச் சுடர் விஜயராஜுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறேன். அந்த இலட்சிய இளைஞனை பறிகொடுத்து துன்பத்தில், துயரத்தில் துடி துடிக்கும் அவரது பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும், கும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

‘தாயகம்’    வைகோ
சென்னை - 8    பொதுச் செயலாளர்,
18.09.2012    மறுமலர்ச்சி தி.மு.க