தமிழகம் எங்கும் மூன்று கட்ட மதுவிலக்குப் பிரச்சாரம் - வைகோ அறிவிப்பு
|
செப் 18, 2012
|
தமிழ்நாட்டை படுநாச நரகக் குழியில் தள்ளும் மது எனும் அரக்கனை ஒழித்தால் அன்றி, தமிழ்நாட்டுக்கு விமோசனம் கிடையாது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், அரசுக்கு வருவாய் தவறான முறையில் தேடுவதற்காக, மதுவை அனுமதித்து, குடும்பங்களின் குதூகலத்தைப் பாழாக்கவோ, தாய்மார்களின் கண்ணீரைப் பெருக்கவோ துளி அளவும் இடம் கொடுக்காமல், மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தனர்.
அறிஞர் அண்ணா அவர்கள் மறைவுக்குப் பின்னர், முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்ற கலைஞர் கருணாநிதி மது விலக்கை இரத்து செய்து, தமிழ் மக்களின் குடிகெடுக்கும் குடியை அனுமதிக்கப் போவதை அறிந்து, அதைத் தடுப்பதற்காக மூதறிஞர் ராஜாஜி அவர்கள் முதல் அமைச்சரின் வீட்டுக்கே சென்று, மதுவைப் புகுத்தாதீர் என்று எவ்வளவோ வேண்டியும்கூட, அதை ஏற்காமல், முதன்முதலாகத் தமிழ் நாட்டில் மதுவை அனுமதித்து, தமிழகத்தின் சீர்கேடுகளைத் தொடங்கியும் வைத்தார்.
அதற்குப்பிறகு, மாறி மாறி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற தி.மு.க-அதிமுக அரசுகள், பொதுமக்கள் நலனைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், இலவசங்களை வழங்குவதற்கும், மதுக்கடைகள் சாராயக் கடைகள் மூலம் ஊழலில் கோடி கோடியாகப் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்கும் வசதியாகவும், வாய்ப்பாகவும் மதுவையும் சாராயத்தையும் அனுமதித்தனர்.
அதனை நியாயப்படுத்துவதற்காக, மது விலக்கு இருந்தால் கள்ளச்சாரயமும், காவல்துறையின் மாமூலும் இடம்பெறும் என்ற வாதத்தை முன் வைத்தனர். அப்படியானால், குற்றத் தடுப்புச் சட்டம் இருந்தும், காவல்துறை இருந்தும், நீதிமன்றங்களில் தண்டனை இருந்தும், கொலை, களவு உள்ளிட்ட குற்றங்கள் நடக்கத்தானே செய்கின்றன? என்ற வாதத்தை முன்வைத்து, குற்றத் தடுப்புச் சட்டங்களையும், காவல்துறையையும், நீதிமன்றங்களையும் அகற்றுவதற்கு அரசுகள் முன்வருமா? என்று கேட்க விரும்புகிறேன்.
மது விலக்கு அமுலில் இல்லாததால், மதுப்பழக்கம் காலப்போக்கில் படிப்படியாக வளர்ந்து, இளம் தலைமுறையினர், குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளி மாணவர்கள்கூட மது அருந்தும் நச்சுப் பழக்கத்திற்கு ஆளாகி, அதன் விளைவாக, ஒழுக்கச் சீர்கேடுகளும், பண்பாட்டுச் சிதைவும் ஏற்பட்டு, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், வழிப்பறி, கொள்ளை, கொலைகள் உள்ளிட்ட அனைத்து சமுதாய ஆபத்துகளுக்கும் மதுவே காரணம் ஆகிவிட்டது.
மனதைப் பதற வைக்கக்கூடிய நிலமை என்னவென்றால், இளம் தலைமுறைப் பெண்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகின்ற, நாம் கற்பனை செய்ய முடியாத விபரீதம், இன்றைக்குத் தமிழ் நாட்டிலே வேகமாக வளர்ந்து வருகிறது. தெருவுக்குத் தெரு ஒயின் ஷாப்புகள், ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள், வீதியில் போவோரை எல்லாம் குடிப்பதற்கு வாருங்கள் என்று அவைகள் இச்சை காட்டி அழைக்கும் கேடு நேர்ந்துவிட்டது.
எண்ணற்ற குடும்பங்களில், தாய்மார்களின் கண்ணீருக்கும், வேதனைக்கும் இந்தக் கொடிய மதுவே மூலகாரணம் ஆகிவிட்டது. இந்த அபாயத்தில் இருந்து தமிழகத்தை மீட்காவிட்டால், தமிழக மக்களின் வருங்காலம், குறிப்பாக நமது சந்ததிகளின் எதிர்காலம் பெரும் நாசத்துக்கு ஆளாகிவிடும் என்பதை, தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு சகோதரனும், சகோதரியும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று மிகுந்த கவலையோடு வேண்டுகிறேன்.
‘பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்பது போல, ஏற்கனவே கருணாநிதியால் புகுத்தப்பட்ட மதுவினால், தமிழ்நாடு பாழாவது போதாது என்று, எலைட் பார்களையும் திறப்போம் என்று, இன்றைய முதல் அமைச்சர் அறிவித்து உள்ளார். தமிழக மக்களின் வாழ்வைப் பாழாக்கி, மதுவினாலும், சாராயத்தினாலும் கிடைக்கின்ற நிதியைக் கொண்டு, ஓட்டுகளை வாங்குவதற்காக இலவசங்களை அள்ளிக்கொடுத்து, தமிழக மக்களின் பெரும்பாலோரை உழைக்கும் எண்ணம் அற்றவர்களாக, திமுக-அதிமுக அரசுகள் ஆக்கிவிட்டன.
எனவே, பூரண மதுவிலக்கு தமிழகத்திலே நிலைநாட்டுவதற்கான விழிப்பு உணர்வை மக்கள் மன்றத்தில் ஏற்படுத்துவதற்கு, மறுமலர்ச்சி தி.மு.க. திட்டமிட்டு இருக்கிறது. முதல் கட்டமாக, அண்ணல் காந்தியார் பிறந்த நாளாகிய அக்டோபர் 2 ஆம் தேதி அன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகம் எங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மறுமலர்ச்சி தி.மு.க. உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தும். சென்னை மாநகரில், அந்த அறப்போரில் நான் பங்கு ஏற்கிறேன்.
இரண்டாவது கட்டமாக நவம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மாவட்டத் தலைநகரங்களில் மறுமலர்ச்சி தி.மு.க., தமிழக அரசைக் கண்டித்து அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
மூன்றாவது கட்டமாக டிசம்பர் 12 ஆம் தேதி அன்று, நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து, எனது தலைமையில் மதுவிலக்குப் பிரச்சார நடைபயணம் தொடங்கப்பெற்று, ஏறத்தாழ 400 கிராமங்கள் வழியாக பிரச்சாரம் செய்து, டிசம்பர் 25 ஆம் தேதி அன்று, மதுரை மாநகரில் மதுவிலக்குப் பிரச்சார நடைபயணம் நிறைவு பெறும்.
இதற்கு இடையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை ஒருவார காலம் நகர்ப் புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கழக அமைப்புகளின் சார்பிலும், அணிகளின் சார்பிலும் மதுவிலக்குப் பிரச்சார நடைபயணம் மேற்கொள்ளப்படும்.
மதுவிலக்கு விழிப்பு உணர்வினை மக்கள் மன்றத்தில் ஏற்படுத்த, மறுமலர்ச்சி தி.மு.க. மூன்று கட்டமாக நடத்தத் திட்டமிட்டு உள்ளதை சிறந்த முறையில் செயல்படுத்துமாறு மாவட்டச் செயலாளர்களையும், கழக அமைப்புகளின் நிர்வாகிகளையும் வேண்டுகிறேன்.
இந்தப் பிரச்சாரத்துக்கு கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து, தமிழக மக்கள் ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
18.09.2012 மறுமலர்ச்சி தி.மு.க

எதிர்வரும் நிகழ்வுகள்
சங்கொலி 2013 |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
நாலாம் ஆண்டு, நடுகல் வணக்க நிகழ்வு - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2013 - பூப்பந்தாட்டப் போட்டிகள் |
சங்கொலி - தாயக விடுதலைப்பாடற் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























