புகலிடம் கோரும் இருநூற்றுக்கும் அதிகமான இலங்கையர்களை இந்தோனேஷியாவுக்கு அருகில் படகொன்றிலிருந்து அவுஸ்திரேலியா மீட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு வடக்கே இந்தோனேஷிய கடற்பரப்பில் புதன்கிழமை இரவு படகொன்றில் இருந்தவர்களுக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் விரைந்து உதவினர். அப்படகிலிருந்த 211 பேர் கடற்படை படகுகளுக்கு மாற்றப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தபின் தனியொரு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அதிகபட்ச எண்ணிக்கையான புகலிட கோரிக்கையாளர்கள் இவர்களாவர் என நம்பப்படுகிறது.
அவுஸ்திரேலிய கடற்படையினரால் இப்படகு மீட்கப்பட்டது என அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவென் கூறினார். இவ்வருடம் 7000 இற்கும் அதிகமானோர் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இப்படகுகளில் இலங்கையர்கள், ஈரானியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள், பாகிஸ்தானியர்கள் ஆகியோரும் அடங்குவர் என அமைச்சர் போவென் கூறினார்.
அவுஸ்திரேலிய ரோந்து கப்பல்களில் சேதங்கள் ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ரோந்துகப்பல்களை சோதனைக்குட்படுத்த அவுஸ்திரேலிய ரோந்து கப்பல்களை பழுதுபார்க்குமாறு அந்நாட்டு பாதுகாப்புதிணைக்களம் உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னரே ரோந்து கப்பலொன்று மேற்படி அகதிகள் படகை கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரோந்து படகுககளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் போவென் கூறினார்.
அபாயகரமான பயணத்தின்மூலம் புகலிடம் தேடி வருபவர்களை மலேஷியாவுக்கு இடமாற்றுவதற்கான சட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தவறிய பின்னர் இவ்வருடம் இதுவரை 108 படகுகளில் 7.364 பேர் அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளனர். இது ஒருவருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் சென்ற அதிகபட்ச புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையாகும்.
கடந்த வருடம் 4.565 பேரும் 2010 ஆம் ஆண்எல் 6.555 பேரும் இவ்வாறு சென்றிருந்தனர். அகதிகள் விடயத்தை கையாள்வதற்கான தெரிவுகளை ஆராய்வதற்காக முன்னாள் பாதுகாப்பு தலைவர் அங்கஸ் ஹஸ்டன் தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்றை பிரதமர் ஜூலியா கில்லார்ட் நியமித்துள்ளார்