பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் 14 மத்திய அமைச்சர்கள் மீது அன்னா ஹசாரே குழுவினர் ஊழல் குற்றசாட்டுகள் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைக்க வேண்டும், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 25ம் நாள் அன்னா குழுவினர் 3 பேர் உண்ணாவிரதம் தொடங்கினர்.
உடல்நிலை காரணமாக ஹசாரே உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் மேடையில் அமர்ந்திருந்தார். நான்கு நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இன்று முதல் உண்ணாவிரதம் இருப்பேன் என அன்னா அறிவித்தார்.
கடந்த 4 நாட்களாக நடந்த போராட்டத்தில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார் அன்னா. உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என டாக்டர்கள், ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டார்.
அவர் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் இன்று முதல் ஜந்தர் மந்தரில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், அன்னா குழுவில் கருத்து வேறுபாடும் வலுத்து வருகிறது. நாட்டின் முதல் குடிமகன் என்பதால் பிரணாப் மீது சாடுதல் கூடாது என அன்னா கூறினார். இதை அன்னா குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார். பிரணாப் ஜனாதிபதி என்பதால் அவரது ஊழல் பற்றி பேச கூடாது என்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என அவர் கூறியுள்ளார்.