பகடைக் காயாக்கப்படும் ஈழத்தமிழினம் - சேரமான்
|
ஜூலை 22, 2012
|
ஈழப்பிரச்சினையில் சிறீலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பது போன்ற தோற்றப்பாடு அண்மைக் காலமாக இந்திய - சிங்கள ஊடகங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததையும், அண்மையில் நிகழ்ந்தேறிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணத்தையும் மையப்படுத்தியே இத்தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
வன்னிப் போரில் சிங்களம் மேற்கொண்ட தமிழின அழித்தொழிப்பு யுத்தத்திற்கு உறுதுணை நின்ற இந்தியா உண்மையில் இப்பொழுது சிறீலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதா? இதனால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது விடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா? இதுதான் இன்று எம்மவரிடையேயுள்ள கேள்விகள். இதற்கான பதிலை நாம் பார்ப்பதற்கு முன்னர் ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் இன்றைய நிலைப்பாடு எவ்வாறான வரையறைக்குள் வகுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.
பனிப்போர்க் காலத்தில் அமெரிக்காவுடன் முரண்பட்டுநின்று சோவியத் ஒன்றியத்துடன் ஒட்டியுறவாடிய இந்தியா இன்று இல்லை. தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவை மீறி எந்தவொரு வெளிச்சக்திகளும் தலையீடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று அன்று இந்திராகாந்தி வகுத்த ‘இந்திரா’ கோட்பாட்டை அவரது புதல்வர் ராஜீவ் காந்தி தூக்கியெறிந்து ஏறத்தாழ கால்நூற்றாண்டுகள் கடந்து விட்டன.
இந்து சமுத்திரத்தை இந்திய சமுத்திரமாக மாற்றும் கனவை இந்தியா கைவிடாத பொழுதும்கூட, பனிப்போரின் முடிவுடன் அமெரிக்காவின் தலைமையில் நெறிப்படுத்தப்படும் தாராண்மைத்துவ உலக ஒழுங்கை தென்னாசியப் பிராந்தியத்தில் கட்டிக்காப்பதற்கான ஒரு தூணாகவே இன்று இந்தியா விளங்குகின்றது. திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளையும், சனநாயக ஆட்சியமைப்பையும் இந்தியா கொண்டிருப்பது இதற்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.
பனிப்போரில் பாகிஸ்தானுடன் ஒட்டியுறவாடிய அமெரிக்கா இஸ்லாமபாத்தை கைவிட்டு ஒரு தசாப்தம் கடந்துவிட்டது. அன்று அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவிய தேனிலவு இப்பொழுது கசப்பான நினைவாகவே உலக வரலாற்றில் படிந்துள்ளது. மாவோவின் மரணத்துடன் பொதுவுடமைத்துவக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்ட சீனாவையும் கட்டியணைப்பதில் அமெரிக்காவிற்கு கொள்ளை பிரியம் உண்டு. இந்தியா போன்று பரிபூரண திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை இன்று சீனா கடைப்பிடித்தாலும்கூட, உலக அரசியலில் அது மேலாதிக்கம் செலுத்த முற்படுவது அமெரிக்காவைப் பொறுத்த வரையில் சவாலுக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது.
இச்சவாலை எதிர்கொள்வதற்கு இப்பொழுது அமெரிக்காவிற்கு ஒரேயரு தெரிவுதான் உள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தில் சீனாவிற்கு மாற்றீடாக இந்தியாவை வளர்த்தெடுப்பதுதான் அந்தத்தெரிவு. இது இந்தியாவிற்கும் பிடித்த ஒரு தெரிவுதான். பனிப்போர் காலத்தில் பாகிஸ்தானையும், சீனாவையும் எதிர்கொள்வதற்கு சோவியத் ஒன்றியத்தை நம்பியிருந்த இந்தியாவிற்கு அமெரிக்காவின் நட்புக் கிடைத்தது மிகப்பெரும் வரப்பிரசாதம் என்றுதான் கூறவேண்டும். இந்து சமுத்திரத்தை இந்திய சமுத்திரமாக்கும் தனது கனவை நிறை
வேற்றுவதற்கு இதனை விட இந்தியாவிற்கு மிகச்சிறந்த வாய்ப்பு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

இந்த வரையறைக்குள்தான் இன்று ஈழப்பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு வகுக்கப்பட்டுள்ளது. ஒருவிதத்தில் மகாபாரத யுத்தத்தில் வரும் சக்கர வியூகமாகவும் இதனை நாங்கள் கொள்ளலாம். பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் ஈழத்தீவை தனது இன்னுமொரு மாநிலமாக சுவீகரித்துக் கொள்ளும் கனவு இந்தியாவிற்கு இருந்தது. இக்கனவு இந்திரா காந்தியின் காலத்திலும் கலையவில்லை. இக்கனவை ராஜீவ் காந்தி கூட கைவிடத் தயாராக இருக்கவில்லை. இக்கனவை நிறைவேற்றுவதற்கு ஈழத்தமிழர்களை தனது பகடைக் காய்களாக அப்பொழுது இந்தியா பயன்படுத்த முற்பட்டது.
இந்தியாவின் இக்கனவை நனவாக்குவதற்கான திறவுகோலாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ரஜீவ் காந்தி கையாண்டார். இதன் அடுத்த பரிமாணமாகவே வடக்குக் கிழக்கு மாகாண சபை தோற்றம் பெற்றது. இதனை நன்கு உணர்ந்து கொண்டதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமரசம் செய்து இந்தியாவிற்கு எதிராக அன்றைய சிங்கள அதிபர் ரணசிங்க பிரேமதாசா போர்க்கொடி தூக்கினார். இன்று இந்தக் கனவை இந்தியா கைவிட்டிருப்பதாக நாம் கருத முடியாது. ஆனாலும் இன்றைய உலக ஒழுங்கில் இவ்வாறான ஏகாதிபத்திய முயற்சிகளில் ஈடுபடுவது தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதால் இக்கனவை இந்தியா கிடப்பில் போட்டுள்ளது.
இதற்கு மாற்றீடாக தனது சொல்லுக்குக் கீழ்ப்படியும் பொம்மை நாடாக சிறீலங்காவை மாற்றியமைப்பதே டில்லியின் இப்போதைய நோக்கமாகும். தமது இந்த முயற்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இடையூறாக இருப்பார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே நான்காம் கட்ட ஈழப்போரில் சிங்களத்திற்கு உறுதுணை நின்று தமிழீழ நடைமுறை அரசை இந்தியா அழித்தது: ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் கொன்றுகுவிக்கப்படுவதை கண்மூடி மௌனியாக நின்று வேடிக்கை பார்த்தது. இந்தியாவின் விருப்பிற்கு மாறாக நடந்து கொள்வது தென்னாசியப் பிராந்தியத்தில் தமது நலன்களைப் பாதிக்கும் என்ற அச்சம் காரணமாகவே இதுவிடயத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் பாராமுகம் காட்டியது.
தனது உதவியுடனும், ஆசீர்வாதத்துடனும் தமிழீழ நடைமுறை அரசை அழித்த மகிந்தர், இப்பொழுது வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக சீனாவுடன் ஒட்டியுறவாடி தனது முயற்சிக்கு ஊறுவிளைவிப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை நோக்கி தனது படைவலிமையை அமெரிக்கா திருப்பிவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பொருண்மிய - இராசரீக உதவியுடன் சிறீலங்காவை தனது பொம்மை நாடாக மாற்றுவதற்கான காலம் கனிந்திருப்பதாகவே டில்லி அதிகார வர்க்கம் கருதுகின்றது.
இதற்கான திறவுகோல்களாகவே உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை, நல்லிணக்க முயற்சி, அரசியல் தீர்வு, வடக்கில் இடம்பெறும் படைமயப்படுத்தலை குறைத்தல் போன்ற விடயங்களை இன்று டில்லி அதிகாரவர்க்கம் கையிலெடுத்துள்ளது. இதே கோசத்தை மேற்குலகமும் முன்வைப்பது இந்தியாவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இங்கு மீண்டும் பகடைக் காயாக ஈழத்தமிழினமே பயன்படுத்தப்படுகின்றது. ஈழத்தீவில் வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாக விளங்கும் தமிழீழ மண்ணை விடுவிப்பதோ, ஈழத்தமிழர்களை தேசிய இனமாக ஏற்றுக்கொள்வதோ, அன்றி தமிழீழ தேசத்தின் தன்னாட்சியுரிமைக்கு வழிசமைப்பதோ இந்தியாவின் நோக்கமன்று.
பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அரசியல் தீர்வை வழங்குமாறு மகிந்தரை இந்தியா வலியுறுத்துவதாக சம்பந்தரும், சுமந்திரனும் அடித்துக்கூறினாலும்கூட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாண இணைப்பு என்பது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இருந்து எப்பொழுதோ நீக்கப்பட்டு விட்டது. ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளின் பொழுது ரணிலின் அரசாங்கம் ஏற்றுக் கொண்ட ஈழத்தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை கோட்பாடுகூட இன்று இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. ஈழப்பிரச்சினைக்கான இந்தியாவின் அரசியல் தீர்வு நிகழ்ச்சி நிரலில் இன்று இரண்டு அம்சங்கள் உள்ளன.
ஒன்று வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது: மற்றையது கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்திற்கு இடமளிப்பது. இதிலிருந்து இம்மியளவும் மாறுபடாத நிலைப்பாட்டையே மேற்குலகமும் கொண்டுள்ளது. வரப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஊடாக தமது நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது அம்சம் நிறைவேற்றப்படும் என்பது இந்தியாவிற்கு நன்கு தெரியும். இந்தியா விரும்புவது போல் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலையும் மகிந்தர் நடத்திவிட்டால் இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது அம்சமும் நிறைவேறிவிடும்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் ஒரு மாகாண அரசாங்கத்தை அமைப்பதன் ஊடாகவும், கிழக்கு மாகாண சபையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தனியரசுக்கான தமிழீழ மக்களின் வேட்கையை நீர்த்துவிடச் செயது, மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் வெடிப்பதற்கான வாய்ப்புக்களை இல்லாதொழிக்க முடியும் என்று இந்தியா நம்புகின்றது.
இவ்வாறான நம்பிக்கை அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகிற்கும் உண்டு. இவ்வாறு மாகாண சபைகளுக்குள் ஈழத்தமிழர்களை முடக்கிய பின்னர் வரும் ஐந்து அல்லது பத்தாண்டு கால நீட்சியில் மகிந்தரை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு தமது சொல்லுக்குக் கட்டுப்படக்கூடிய பொம்மை அரசாங்கத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதே இந்தியாவின் நோக்கமாகும்.
இதற்கான புறநிலைகளை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே தனது காய்களை வேகமாக மேற்குலகமும் நகர்த்தி வருகின்றது. இதன் அர்த்தம் கேணல் கடாபியின் பாணியில் மகிந்தரை தூக்கியெறிவதன்று: எவ்வாறு ஆட்சியதிகாரத்திலிருந்து படிப்படியாக சந்திரிகா அம்மையார் அகற்றப்பட்டாரோ, அதே பாணியில் மகிந்தரையும் வீட்டுக்கு அனுப்புவதே இந்தியாவினதும், மேற்குலகினதும் நோக்கமாகும்.
இதனால் ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிட்டப் போவதுமில்லை: தண்டனைக் களத்திற்கு மகிந்தர் இழுத்துச் செல்லப்படப் போவதுமில்லை. இந்த மெய்யுண்மை குடும்ப ஆட்சியையும், வாரிசு அரசியலையும் நம்பியிருக்கும் மகிந்தருக்கும் நன்கு தெரியும்: வாளேந்திய சிங்கக் கொடியை உவகையோடு அசைத்த சம்பந்தருக்கும் புரியும்: ஏன் இராசதந்திரப் போராட்டத்தின் போர்வையில் போர்க்குற்றம் என்ற கோசத்திற்குள் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ தேசிய எழுச்சியை முடக்கி வைக்க முற்படுபடும் ‘சனநாயகவாதிகளுக்கும்’ நன்கு தெரியும்.
நன்றி : ஈழமுரசு

எதிர்வரும் நிகழ்வுகள்
தேசத்தின் மயில்கள் |
சங்கொலி 2013 |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
நாலாம் ஆண்டு, நடுகல் வணக்க நிகழ்வு - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2013 - பூப்பந்தாட்டப் போட்டிகள் |
சங்கொலி - தாயக விடுதலைப்பாடற் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























