கனடாவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவரின் வீட்டில் தீ விபத்து


ஜூலை 14, 2012
 

கனடாவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீடும் தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் இத் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஸ்டீல் அவெனியூ- மார்க்கம் றோட்டுக்கு அண்மையில் ஈஸ்ட்வல் ட்ரைவ்வில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான வீடே தீக்கிரைக்கானது.

குறித்த வீட்டில் குழந்தைகள் உட்பட 12 பேர் தங்கியிருந்துள்ளனர். இவர்களில் 6 பேர் விருத்தினராக தங்கியிருந்தார்கள் எனவும் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த மூவருக்குமே காயம் ஏற்பட்டதாகவும், இவர்கள் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அறிய வந்துள்ளது.

இவர்களில் ஒருவர் தீக் காயங்களுடன் ரொறொண்ரோ மருத்துவமனையிலும், மற்றைய இருவரும் புகையினை உட்சுவாசித்தமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மார்க்கம் ஸ்ரோஃப்வில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். குறித்த வீடு தீப்பற்றியதையடுத்து, தீயணைப்புப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் 30 நிமிடம் தாமதமாக வந்தனர் எனவும் அயலவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதனால் தான் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், மீட்புப்படையினர் வராமல் வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வரவில்லை எனவும் அயலவர்கள் கருத்துத் தெரிவித்தனர். கார் தரிப்பிடத்தினுள் (காராஜ்) ஏற்பட்ட தீ வெடிப்பே இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டாலும் தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் $ 900,000 ஆக இருக்கும் என மதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மார்க்கம் 7 ஆம் வட்டாரத்துக்குச் சேர்ந்த பகுதியாக இருப்பதனால் நகரசபைத் தலைவர் லோகன் கணபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்கள் தெரிவித்துள்ளார்.