செங்கல்பட்டு அகதிகள் முகாமில் புதிதாக மேலும் 10 பேர் உண்ணாவிரதத்தில்!


ஜூலை 2, 2012
 


செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 10 பேர் புதிதாக உண்ணாவிரத போராட்டத்தை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே 13 பேர் 17 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு நிலைமை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில் முகாமை சேர்ந்த 10 பேர் தங்களை வெளி முகாமுக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை வெளி முகாமுக்கு மாற்றவேண்டும் என கோரி கடந்த பெப்ரவரி ஏப்ரல் மாதங்களில் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை அடுத்து அப்போது உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
எனினும் தடுத்து வைக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாது தாமதமாகிவருவதால் இதனை கண்டித்து கடந்த 15ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடக்கியுள்ளனர்.
இவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாகியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் த.பாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் சிவகுமார் லோகநாதன் கமலாசரன் தனுசன் எனும் நான்கு தமிழர்களை செங்கல்பட்டு முகாமிலிருந்து திறந்தவெளி முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.