பிரித்தானியாவில் போர்க்குற்றவாளி மகிந்தவின் பிரசன்னத்திற்கு எதிர்ப்பலைகள் ஓங்கியுள்ள நிலையில், சர்வதேசத்தின் பார்வை பிரித்தானியாவை நோக்கித் தற்போது திரும்பியுள்ள நிலையில் தற்போது இந்த சாதகமான சூழலில் ஒவ்வொரு தமிழ் மகனின் பங்களிப்பும் இன்றியமையாததாக உள்ளது. இந்த நேரத்தில் தாயகத்தில் சிங்களத்தின் அத்து மீறல்கள் மேலும் மேலும் உச்சமடைந்து கொண்டிருக்கின்றது.
ஒரு போர்க்குற்றவாளியை பிரித்தானியாவின் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு அழைத்திருக்கும் நிலையில், லண்டன் பி.பி.சி தமிழோசை சேவைக்கு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய வழங்கிய செய்தியில், இலங்கையின் வடபகுதி தமிழர்களுக்கு உரித்தானதல்ல எனவும் யார்வேண்டுமானாலும் அங்கு காணி வாங்கலாம் எதுவும் செய்யலாம் எனத் துணிச்சலாக இறுமாப்போடு தெரிவித்திருந்தார்.
அத்துடன் கோத்தபாயவின் கூற்றை வரவேற்று அதற்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வகையில், ‘வந்தேறு குடிகளான தமிழர்கள் வடக்குக்கு உரிமை கோருவதா’ எனக் கடும் போக்கிலான கருத்துகளை முன்வைத்தார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர். இந்நிலையில், புத்தரின் சித்தாந்தங்களை அறிந்த எங்களுக்கு, வல்லரசு முத்திரை குத்தப்பட்டவர்கள் போதிக்க வேண்டிய அவசியமில்லை. நீதியும், சட்டத்தின் ஆட்சியும் எங்களுக்கு அந்நியமான எண்ணக்கருக்கள் அல்ல. இவ்வாறு மஹ்ந்த ராஜபக்ஷ தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐ.நா.வெசாக் தின வைபவத்தில் உரையாற்றுகையில தெரிவித்தார்.
மேலே குறித்த விடயங்கள், நாம் தமிழ் மக்களை எதுவும் செய்வோம் எம்மை எவரும் கேட்கக் கூடாது என்ற இறுமாப்பிலேயே சிங்களம் உள்ளமை தெட்டத் தெளிவாகப் புலப்படுகின்றது. இதனை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும். இதேவேளை, சிங்களத்தின் கூற்றுக்களுக்கு அமைவாக தமிழர் தாயகப் பகுதிகளை முற்றாக சிங்களமயப் படுத்தும் நடவடிக்கைகள் வேகமாக சிங்கள இனவாதத்தால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தை அண்டிய, முத்தையா சுவாமிகள் வசித்த கந்தவேள் முருகன் ஆலயத்தினுள் கடந்த வெள்ளிக்கிழமை பிரவேசித்த இராணுவ உடையணிந்தோர் அங்கிருந்த கருங்கற்களினாலான தூண்கள், சிறிய கட்டடம் மற்றும் வழிபாட்டுப் பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அங்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்தவை வருமாறு தாந்தாமலை முருகன் ஆலயமும் அதனை அண்டிய பிரதேசங்களும் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுக்குரிய புனித பிரதேசமாகும். இந்தப் பிரதேசங்களில் அண்மைக்காலமாக பெரும்பான்மை இனத்தவர்களும் இராணுவத்தினரும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை அழித்துவிட்டு, பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சைக்கொடி சுவாமிமலை எனும் இந்துக்களின் பூர்வீக பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த பிக்குகள் இராணுவம் மற்றும் பொஸிசாரின் உதவியுடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு விகாரை அமைப்பதை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டிருந்தேன். எனவே, இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களைப் பூண்டோடு அழித்துவிட்டு அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு இலங்கை அரசின் அனுசரணையுடன் பௌத்த பிக்குகள் செயற்படுகின்றனர்.
மேலும்...