ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸை சாட்சியாளராக அழைக்க வேண்டும் என ஹோமாகம நீதவான் விடுத்துள்ள உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி சட்ட மா அதிபர் விடுத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வெளிநாடு ஒன்றில் வசிப்பதாக மொஹான் பீரிஸ் அண்மையில் ஐ.நா சித்திரவதை எதிர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
அதனால் மொஹான் பீரிஸிடம் சாட்சிபெற வேண்டும் என எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா என்னெலிகொட ஹோமாகம நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸை சாட்சியாளராக அழைக்குமாறு உத்தரவிட்டார்.
இன்று (31-05-2012)அந்த உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் கருத்து வெளியிட்ட சட்ட மா அதிபர், முன்னாள் சட்ட மா அதிபர் தொழில்துறை சார்பில் வெளியிட்ட கருத்தை சாட்சியாக எடுப்பது அவருக்கு விடுக்கப்படும் இடையூறு என குறிப்பிட்டார்.
ஒரு நபரிடம் சாட்சி பெறுவது எவ்வாறு இடையூறாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் டி சில்வா, ஜனாதிபதியை தவிர்த்து ஏனைய அனைத்து பிரஜைகளையும் சாட்சியாளர்களாக அழைக்க நீதவானுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.
அதனால் நீதவானின் கடமைகளில் தலையிட மேன்முறையீட்டு நீதிமன்றம் விரும்பவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, சட்ட மா அதிபரின் கோரிக்கையை நிராகரித்தார்.
மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளனa