• கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்கள் மீதும், போராட்ட ஆதரவாளர்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள பொய்வழக்குகளைத் திரும்பப் பெறு!
• நடைமுறையில் உள்ள 144 தடையுத்தரவை திரும்பப் பெற்று, தொடரும் அரசின் அடக்குமுறையை நிறுத்துக!
• போராடும் இடிந்தகரை மக்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குக!
அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் – தமிழர் பாதுகாப்பு இயக்கம்.
(Save Tamils) மூன்று முழக்கங்களை முன்னிறுத்தி, பரிமளா, சமந்தா, ஜார்ஜ், ஜான்சன் ஆகிய நால்வர் நூறு மணி நேர உண்ணாநிலை மேற் கொண்டனர். 10.5.2012 மாலையில் தொடங்கி 14.5.2012 மாலை வரை சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமான “தாயகத்தில்” நூறு மணி நேர உண்ணாநிலை இருந்தனர்.
தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் (Save Tamils) செயல்படும் நண்பர்கள் அனைவரும் கணிணித் துறைப் பொறியாளர்கள். படித்த, நாகரிகமான, அதிக ஊதியம் பெறுகிற மக்கள் பிரிவினர். கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மென்முறையில் போராட இவர்களுக்கு கிடைத்த இடம் தனியாருடைய இடம். அறவழிப் போராட்டங்கள் நடத்த இவர்கள் மட்டுமில்லை, பொதுவான மக்கள் பகுதியினருக்கும் நம்பிக்கையாய்க் கிடைக்கின்ற இடங்கள் ஒன்று ‘தாயகம்’ அல்லது கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ”அண்ணா ஆட்டோ கேரேஜ்” என்ற இடம். இரண்டும் தமிழின உணர்வாளார்களுடையதாக இருந்தாலும் தனியார் உடமைகள்.
மக்களின் கொதிநிலை உணர்வின் வெளிப்படுதல்களாய் இருக்கின்றவை எழுத்து, காட்சி ஊடகம், அரங்க நிகழ்வு, பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம், தொடர் முழுக்கப் போராட்டம், பேரணி போன்றவை. எழுத்து, காட்சி ஊடகம் இரண்டுக்கும் தவிர மற்றையனவற்றுக்கு நிகழ ஒரு இடம் தேவை. சென்னை தமிழ்நாட்டின் தலைநகர்.
தலைநகரில் மட்டுமன்று சிறு, பெரு நகரங்களில் கூட நிகழ்விடங்கள் காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், தனியார் அரங்கமாக இருந்தாலும் காவல் துறையின் அனுமதி பெற்றுத்தான் நடத்த இயலும். ஆனால் கருத்துப்பரப்புரை செய்ய “தெருமுனைக் கூட்டங்கள்” ஒரு புதிய உத்தியாக கைக்கொள்ளப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாய் தெருமுனைக்கூட்டங்கள் நடத்தப் பெறுகின்றன.
துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தபடி, கையில் ஒரு “ஒலிபெருக்கியை” பிடித்து எந்தச் தெருச் சந்திலும் நின்று பேசிவிட்டுப் போய்விடலாம். மக்களின் சுதந்திரமான கூட்டத்துக்கு தெருமுனைக் கூட்டங்கள் தடையாக இருக்கிறதாம். சட்டவிரோதமான கூடுதலால் (Unlawful Assembling) சட்டம் அமைதி கெடுகிறதாம் அதனால் தெருமுனைக் கருத்துப் பரப்பலும் தடை செய்யப்பட்டுவிட்டது. தொடர்ந்து 144 தடையுத்தரவை நீட்டித்து நீட்டித்து, தெருமுனை கூட்டமோ, பொதுக் கூட்டமோ, நடத்த அனுமதி மறுக்கப்படுகிறபோது, நீதிமன்றத்துக்குப் போய் தடையாணை நீக்கம் பெற்றுவர வேண்டும். கூட்ட ஏறபாட்டளார்களில் எத்தனை பேர் உயர்நீதிமன்றம் செல்ல சாத்தியமாகும்?

காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சட்ட திட்டப்படியே எத்தனை நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பித்தாலும், நிகழ்வுக்கு முதல் நாள் வரை எழுத்துப் பூர்வமாக ஒருபதிலும் தருவதில்லை. நிகழ்வு அன்று நடத்திக் கொள்ளுங்கள் அல்லது இல்லை என்று வாய்மொழியாக சொல்வார்கள் அல்லது எழுத்துப் பூர்வ பதிலும் தருவதுண்டு. இதன் காரணமாக முன்னேற்பாடுகள் செய்ய வழியில்லாமல், கூட்டமும் நடத்தமுடியாமல் போதுமான பரப்புரைக்கான வழிகளும் அடைபடுகின்றன. நீதிமன்றத்துக்குப் போனால் ‘நாங்கள் ஒன்றும் தடைவிதிக்கவில்லையே’ என்று எக்காளமாய் காவல்துறை பதில் சொல்லும். நீதிமன்றமும் வேறொரு நாளில் காவல்துறையிடம் அனுமதி பெற்று நடத்திக்கொள்ள உத்தரவிடும்.
வெள்ளைக்காரன் அடிமை கொண்டிருந்த காலத்தில் வாய்ப் பூட்டுச் சட்டங்கள் ஆண்டன. எதிலும், எங்கும் கருத்துரைக்கத் தடை. “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்”. சனநாயக பூமி என வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய இன்று வெள்ளைக்காரன் இடத்தை காவல்துறையும் அரசும் மிக எளிதாக கைக்கூட்டுக்குள் எடுத்துக் கொண்டார்கள். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் கூட, நியூயார்க், நியூஜெர்சி, சான்பிரான்சிச்கோ, சியாட்டில் போன்ற பெரிய நகரங்களில் பேரணி நடத்த பெரிய வணிக வீதிகள் ஒதுக்கப்படுகின்றன.
சென்னையில் இரு ஆண்டுகள் முன்பு வரை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகிலுள்ள நடைபாதை இடம், அரசு பொது மருத்துவமனை எதிரில் மெமோரியல் அரங்கு என குறிப்பான இடங்கள் உண்ணாநிலை, ஆர்ப்பாட்டம் நிகழ்த்த அனுமதிக்கப்பட்டன. புதிய சட்டமன்ற வளாகம், புதிய தலைமைச் செயலக நிர்மாணத்தையும் பாதுகாப்பையும் காரணம் காட்டி கடந்த தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட இந்த இடங்கள் மறுபடியும் அனுமதிக்கப்படவில்லை.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கொடுக்கப்பட்ட இடத்தையும் இந்த ஆட்சியில் இவர்கள் பங்குக்கு பறித்துக் கொண்டார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடங்களில் உயர்ந்து பறக்கும் பதாகைகள், உரத்து எழுப்பும் முழக்கங்கள் மக்களை ‘இங்கு ஏதோ நடக்கிறது’ என்று கவனிக்க வைத்தன. ‘தாராம் பூராம்னு’ என்னவோ சொல்றாங்க என்று ஒடிக்கொண்டிருக்கும் கால்களை நின்று நிதானித்து கவனம் குவிக்க வைத்தன.
கூடங்குளம் வட்டார மக்கள், இப்போது சொந்த நிலத்தில் கூட கூட்டம் போட ஏலாது; கூட்டமாய் நடைபோடக் கூடாது. சின்னப் பட்டிக்காடுகளிலும் நடைமுறையிலிருக்கிற 144 தடை உத்தரவின் வேதனையை இதற்குமுன் அங்கு எவரும் அனுபவித்ததில்லை. பிழைப்புக்காக, வேலைக்காக அல்லது வேறு ஏதேனும் ஒரு காரியத்திற்காக மக்கள் சேர்ந்துதான் போவார்கள். கல்யாணம், சடங்கு, இழவு என்றால் கூட்டாக போவார்கள். இன்று அவை இல்லாததாக்கப்பட்டு, சொந்த ஊர்களில் அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். இனப்படுகொலை செய்யும் இலங்கையில் தமிழரின் தாயகப் பகுதியான வன்னியில் இரு கிராமங்களுக்கு ஒரு இராணுவ முகாம் நிலைகொண்டிருக்கின்றது. கூடங்குள வட்டாரத்தில் இராணுவ முகாம்கள் இன்னும் வரவில்லை. ஆனால் ஒவ்வொரு ஊர் முனையிலும் ஒரு காவல்துறை சோதனைச் சாவடி காட்சி தருகிறது.
சீமான்களுக்கும், சீமாட்டிகளுக்கும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் 24 மணி நேர தடையற்ற மின்சாரத்தை, சென்னைக் கோட்டையிலிருக்கும் ராணி வழங்குகிறார். இதற்கு முன் அரியாசனத்திலிருந்த ராஜாவும் இதையே செய்து கொண்டிருந்தார். கடந்த 9 மாதங்களாய் தொடர் போராட்டமும் மே முதல் நாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலையும் மேற்கொண்டிருக்கும் கூடங்குள மக்களின் வேண்டுகோளுக்கு செவி கொடுக்க ராணிகளுக்கும், ராஜாக்களுக்கும் நேரமோ அக்கறையோ துளியும் இல்லை.
“அஹிம்சைகளின் முறையீடுகளுக்கு
எந்த ஆதிக்கக்காரனும்
செவி மடுப்பதில்லை”
கவிஞர் இன்குலாபின் இந்த வார்த்தைகளுக்கு ராணிகளும், ராஜாக்களும் செயல்வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போராட்டத்தை ஒன்பது மாதங்களாய் கொஞ்சம் கூட தளர்வின்றி எடுத்துச் செல்கிற இவர்களுக்கு எது ஆதர்சம்?. உயிரிழப்பு இல்லாமல் வாழவேண்டுமென்பதே ஆதர்சம். உண்ணாநிலை இருந்தவர்களில் 260 பேர் 11.5.2012 மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதோடு அல்லாமல், உண்ணாநிலையிலிருந்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளார்கள். ஏதாவது அசம்பாவிதம் நடக்காதா என ஆதரவு கழுகுகள் மூக்கு வியர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உயிரிழப்பு ஏதாவது நடந்து விட்டால் கொலைக்குற்றம் சுமத்தி அலைக்கழிக்கத் துடித்துக் கொண்டு நிற்கிறார்கள். உண்ணா நோன்பு என்ற அறவழியை ஒரு இக்கட்டில் கொண்டு போய் நிறுத்திட வஞ்சக வலை ஏந்திய மனங்கள் காத்து நிற்கின்றன. பிணவாசனை நுகரக்கிடைக்காதா எனவும் அறவழியில் நம்பிக்கை பொய்த்துப் போகிறபுள்ளியில், போராட்டம் திசைமாறாதா எனவும் வன்முறையைப் பிரயோகிக்க அரச பயங்கரம் தயாராக காத்திருக்கிறது.
இடிந்தகரையானாலும், அதற்கு ஆதரவாய் தமிழகம் முழுவதும் எழுகிற குரல்கள் ஆனாலும், சென்னையில் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினரின் (Save Tamils) நூறு மணி உண்ணாநிலையாயினும், எதையும் அலட்சியப் படுத்துவது, எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துவது; இதனால் மக்கள் கோபம் கொண்டு எழமாட்டார்களா என்ற மோசமான தருணத்தை உற்பத்தியாக்குவது. இதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் திட்டம். இதில் ஜெயலலிதா என்ற தனிநபர் குணாம்சம் ஆட்சியோடு இணைகிற புள்ளி முக்கியமாய் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அலட்சியப்படுத்துதல், அதற்கு மேலே மூர்க்கம், இவை ஜெயலலிதாவிடம் இயல்பாய் அமைந்திருக்கும் வன்முறைக் குணவாகுகள். இந்தப் புள்ளியில் அதிகாரம் சங்கமிக்கிறது.
போராடும் இடங்களைப் பறிப்பதன் மூலம், போராடும் உரிமையைத் தடைசெய்ய இயலும், போர்க் குணத்தை இல்லாமல் செய்ய முடியும் என்ற அரசின் கற்பனையை புரிந்து களத்தில் நிற்கிறவர்கள்தாம் போராளிகள். இருக்கும் இடத்தைப் பறித்தாகிவிட்டது ஆனால் வாகனம் மூலம் ஊர் ஊராய் பரப்புரை செய்யும் புதிய வழியை ”தமிழர் பாதுகாப்பு” (Save Tamils) உள்ளிட்ட இயக்கத்தினர் தொடங்கி நடத்துகின்றார்கள். எதிரி எந்தவித அடக்குமுறை ஆயுதங்களை ஏந்துகிறானோ, அந்த இடத்தில் வேறு புதிய புதிய ஆயுதங்களை போராளிகள் ஏந்துவார்கள் என்பதை அடக்குமுறை அரசுகள் அல்லது ஆதிக்க சக்திகள் உணர்வதே இல்லை. இங்கு அனுபவ பூர்வமாக உண்மையை உணர்தல் என்பதற்கு மாற்றாக அதிகார பூர்வமாக உண்மையை அடித்தல் என்கிற கோமாளித்தனமான நிலைப்பாடுகளை அட்சியாளர் எடுக்கிறார்கள் அணு உலைக்கு எதிராக போராடும் சக்திகளுக்கு இவர்களே புதிய புதிய உத்திகளையும் புதிது புதிதாய்ப் போராடும் வழிமுறைகளையும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
சனநாயகம் பற்றி இப்போது ஒரு தெளிவுக்கு வரவேண்டியிருக்கிறது. இன்றைய நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் சனநாயகம் சர்வாதிகார ஊற்றை உருவாக்குகிற தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது. பெரும்பான்மை வெற்றி சர்வாதிகாரிகளையே உருவாக்கும் என்பது தொடர் நிருபணமாகி உள்ளது. அது ஒருபோதும் சனநாயகவாதிகளை உருவாக்காது என்பது உணரப்படவேண்டிய உண்மை.
மலையாளத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் எழுதிய நெடுங்கதை ‘இரண்டாவது இடம்’. இந்த நெடுக்கதை பஞ்ச பாண்டவர்களில் முக்கியமான பீமன் தனக்குரிய ‘இரண்டாவது இடம்’ பறி போவதை எதிர்த்துக் குரல் தருவதை விளக்குகிறது. போராடும் மக்களுக்கு சனநாயகத்தில் முதல் இடம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு இரண்டாவது, முன்றாவது இடம் மட்டுமல்ல, எங்கேயும் சனநாயகத்திற்கான இடத்தை வழங்க ஆதிக்க சக்திகள் தயாராகயில்லை. சனநாயகத்தில் மக்களே முதன்மை, அந்த முதல் இடத்தையே மக்கள் கோருகிறார்கள். அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினரும், தமிழர் பாதுகாப்பு போன்ற (Save Tamils) இயக்கங்களும் இப்போது அந்த ஒற்றைக் கேள்வியை எழுப்புகிறார்கள் – ‘எமக்குரிய இடம் எங்கே?’