பிரான்சில் எதிர்வரும் யூன் மாதம் பாராளமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அத்தேர்தலில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களின் காத்திரமான பங்கு உள்ள நிலையில் பல்வேறு நகரங்களில் தமிழ்மக்கள் வாழும் பகுதி நகரபிதாக்கள், பாராளமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுடனான சந்திப்புக்களை மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஆர்ஐந்தே நகரில் கடந்த 20ம் திகதி தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலில் நகர முதல்வர் Philippe doucet அவர்களும், உதவி முதல்வர் Nicolas bouchand மற்றும் அனைத்து வெளிநாட்டு அமைப்பின் பொறுப்பாளர் திருமதி. Myriam மற்றும் முக்கியம் வாய்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
தமிழ்மக்கள் சார்பாக ஆர்ஐந்தே தமிழ்ச்சங்க தலைவர், தமிழ்ச்சோலைப் பொறுப்பாளர், தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர், ஏனைய தமிழர் அமைப்புகளும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில்களும், அவர்களின் எண்ணக்கருத்து நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருந்தது. இங்கு வாழும் குழந்தைகளின் கல்வி, கலாச்சாரம், தாய்மொழியின் அவசியம், மற்றும் வேலை செய்பவர்கள், செய்துவிட்டு முடியாமல் இருப்பவர்களுக்கான சட்டபூர்வமான உதவி, பாதுகாப்பு, பல்இனகலாச்சார, சகோதரத்துவ முன்னெடுப்புக்களும் அதில் தமிழ் மக்களின் நிலைப்பாடும், பங்களிப்பு பற்றியும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதே வேளை எமது தாயக மண்ணின் கடந்த கால இன்றைய நிலைப்பாடும் அதில் பிரான்சு நாட்டின் புதிய அரசியல் முன்னெடுப்பு, உதவி, எந்தவகையில் அமையவேண்டும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு எந்த வகையில் உள்ளது என்பதையும் தமிழீழ மக்கள் பேரவையின் தலைவர் திரு. திருச்சோதி அவர்கள் கூறியிருந்தார்.
அவற்றை உள்வாங்கிக் கொண்ட முதல்வர் அவர்கள் 2009 ம் ஆண்டு எமது மக்கள் வீதிகளில் இறங்கிப்போராடியதையும், தன்னிடம் கூட இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டதையும் தான் மறக்கவில்லை என்றும், அந்த நேரம் அமைதியாக இருந்த சர்வதேசம் இன்ற ஏதோ தமிழ்மக்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றது என்றும் அந்த வகையில் தாம் உதவிடுவோம் என்று கூறியதுடன்.
தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த பிரதேசத்தில் அவர்கள் விரும்பும் ஒரு வேலைத்திட்டதை தாம் முன்னெடுக்க உதவிடுவதாகவும் உறுதியளித்திருந்தார்கள். அங்கு வாழும் தமிழ் மக்களுடன் நல்ல தொரு உறவைப்பேணிவரும் முதல்வர் அவர்கள் கடந்த மாதம் தமிழர் கலைபண்பாட்டுக்கழம் நடாத்திய தகதிமிதா பரதநடனப்போட்டியில் பங்கு பற்றிய குழந்தைகளுக்கான சான்றிதழ்களையும் வழங்கி மதிப்பளித்திருந்தார்.
இதே போன்றே நீண்ட காலமாக எமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் செவரோன் மாநகர முதல்வர், மற்றும் கிளிச்சி பிரதேச முதல்வர் இன்னும் பலர் வரும் யூன் மாதம் நடைபெறப்போகும் பாராளமன்ற தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான ஆதரவுவையும், நன்றியையும் தமிழ் மக்கள் தமது வாக்குகளால் வழங்கப்போகின்றனர். அவர்களும் வெற்றியீட்டி எமது பேரவாவை நிறைவேற்ற உதவிடுவார்கள் என்று நம்பிக்கை கொள்கின்றோம்.




