’மஹிந்தவுக்கு எதிராக வழக்குத் தொடரலாம்’

செப்டம்பர் 14, 2017

சில் ஆடைகளை வழங்குவதற்கு உத்தரவிட்டதாக ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வழக்கு நடைபெறும்போது வாய்திறவாமல் இருந்துவிட்டு, தற்போது வீரரைப்போல பேசுவதாகவும் அவர் மீது எவரும் வழக்குத் தொடரலாம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, நேற்று (13) தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், "முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் 24 நாட்கள் இடம்பெற்றன.

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நினைத்திருந்தால் அப்போதே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கலாம். வழக்கு தொடர்பான விடயங்கள் மற்றும் தீர்ப்பு குறித்து ஒரு சட்டத்தரணி என்ற வகையில் விவரங்களை அவர் நன்கறிவார். வழக்கு முடிந்த பின்னர் சிறைச்சாலை வளாகத்திலிருந்து வீரரைப்போல பேசுகிறார். சில் ஆடைகளை வழங்குவதற்கு தானே உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளதால், அவர் மீது எவருக்கும் வழக்குத் தொடர முடியும். அத்துடன், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிலும் அவர் மீது வழக்குத் தொடர வாய்ப்பு உள்ளது" என்றார்.

கேள்வி: அருந்திக பெர்ணான்டோவை பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கான உண்மையான காரணம் என்ன, ஜனாதிபதியிடமிருந்து 25 கோடி ரூபாய் அவர் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனவே?

ராஜித: அது தொடர்பில் எம்மை விட ஊடகவியலாளர்களான நீங்கள் அதிகம் அறிந்துவைத்திருக்கிறீர்களே! அவர் நீக்கப்பட்டமை மிகச் சரியான முடிவு. காலம் தாமதித்திருக்கக் கூடாது.

தயாசிறி: கட்சியில் இருந்துகொண்டு கட்சியை விமர்சிக்க முடியாது. ஏதும் முரண்பாடுகள் இருந்தால் அதனைப் பேச வேண்டிய முறைமை ஒன்று உள்ளது.

கேள்வி: பிரதியமைச்சர் நிமல் லன்ஸாவும் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்திருந்தாரே?

தயாசிறி: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுடனான சந்திப்பு, நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது நிமல் லன்ஸாவும் சமூகமளித்திருந்தார். கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வது மற்றும் தேர்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்வது குறித்து பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதன்போது அவருக்குரிய பொறுப்பைச் செய்வதாகவும் ஏற்றுக்கொண்டார். ஊடகங்களுக்கு அவர் அவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தாலும் கூட, ஜனாதிபதியிடம் அவர் எதுவும் கூறுவதில்லை. அநேகர் அப்படித்தான்.

அருந்திக பெர்ணான்டோவும் இன்று (நேற்று) காலை ஜனாதிபதியை சந்தித்திருக்கிறார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கேள்வி: லலித் வீரதுங்கவுக்கு சில் ஆடைகளை வழங்குமாறு தானே உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறாரே?

ராஜித: முதலில் சில் ஆடைகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன என்பதை நான் கூறுகிறேன். அதற்கான ஆதாரங்கள் (புகைப்படங்களை காட்டுகிறார்) என்னிடம் இருக்கின்றன. சில் ஆடைகளுடன் மஹிந்த ராஜபக்ஷவின் செய்தி அடங்கிய, அவருக்கு வாக்களிக்குமாறு கோரும் கையேடுகளும் அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட சுவர்க் கடிகாரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2014 செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவித்திருந்தார். ஊவா மாகாண சபை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இவ்வாறான செயற்பாடுகள் அரச தரப்பின் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தேர்தல் காலங்களில் விகாரைகளின் ஊடாக சில் ஆடைகள் வழங்கப்படுகின்றமை அரசியல் செயற்பாடாகவே கருதுவதாகவும் விகாரைகளில் காலடி எடுத்து வைக்காத வேட்பாளர்களும் பௌத்த மதமல்லாத ஏனையோரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையானது பௌத்த மதத்தை கேலிக்குள்ளாக்குவதாகவே எண்ண முடிகிறது என அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பிலான முழுமையான காணொளிகள், ஒலிப்பதிவுகள் என்னிடம் உள்ளன. இவ்விடயத்தில் யாரும் நீதிமன்றத்தை நாடினால் இந்த ஆதாரங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர், நவம்பர் 22 ஆம் திகதி அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். அதில் அரசாங்க அதிகாரிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதை தெரிவித்திருந்தார். ஆதலால் இவை அனைத்தும் தனக்குத் தெரியாது என, லலித் வீரதுங்க கூற முடியாது.

தேர்தல் நடவடிக்கைகளில் எந்தவோர் அரச அதிகாரியும் ஈடுபடக் கூடாது என சுற்றுநிருபம் அனுப்பியவர் தான் லலித் வீரதுங்க. அமைச்சுகளின் அனைத்து செயலாளர்களுக்கும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் கூட சுற்றுநிருபம் அனுப்பினார். இறுதியில் அவரே அதனை மீறியிருக்கிறார். தேர்தல் காலங்களில் சில் ஆடைகள் விநியோகிக்கப்பட்டமை குறித்து ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு ஆதாரங்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தது. அதைத்தவிர வேறு அமைப்புகளும் முறைப்பாடு செய்திருந்தன. சில் ஆடைகள் வழங்கியமை அப்பட்டமான தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறும் செயலாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அப்போதே கூறியிருந்தார்.

மோசடி செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும். மோசடி செய்தார்கள் என நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களுக்காக, பிக்குகள் சிலர் பணம் திரட்டி வருகின்றனர். இது எந்த வகையில் பௌத்த தர்மத்துக்குரிய நியாயம் என எனக்குத் தெரியவில்லை.

கடந்த காலத்தில் வறுமையின் காரணமாக 8 தேங்காய்களைத் திருடிய சிறுவனுக்கு தண்டனை வழங்கப்பட்டபோது, அதுபற்றி பிக்குகள் எவரும் பேசவில்லை. அந்தச் சிறுவனுக்காக பணம் சேர்த்திருந்தால் அதுதான் தர்மம். தாயின் புற்றுநோயை குணப்படுத்துவதற்காக, சங்கிலியை அபகரிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவ்வாறானவர்களுக்குத் தான் இவர்கள் உதவ வேண்டும்.

கேள்வி: குருநாகல் மாவட்டத்தில் சில் ஆடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டனவா, அந்த வைபவங்களில் நீங்களும் கலந்துகொண்டிருந்தீர்கள் தானே?

பதில்: குருநாகல் மாவட்டத்தில் சில் ஆடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக்கொண்ட விகாராதிபதிகள் சிலர் பயம் காரணமாக உபயோகப்படுத்தாமல் வைத்திருந்ததையும் அறிவேன். சில் ஆடைகளை நான் பகிர்ந்தளிக்கவும் இல்லை. அவ்வாறான விழாக்களில் கலந்துகொள்ளவும் இல்லை.

கேள்வி: லலித் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நீங்கள் கவலை வெளியிட்டுள்ளீர்களே?

தயாசிறி: நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நான் கருத்து வெளியிடவில்லை. லலித் வீரதுங்க சிறந்த அரச சேவையாளராக கடமையாற்றியிருந்தார்.

கேள்வி: அமைச்சர் ராஜித அவர்களே, நீங்கள் சில் ஆடைகளை பகிர்ந்தளிக்கவில்லையா?

பதில்: இல்லை.

கேள்வி: நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் உடனடியாகவே சிறைச்சாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்களே, அது எவ்வாறு சாத்தியமாகும்?

ராஜித: அதற்காகத்தான், வைத்தியர்கள் நான்கு பேரின் ஆலோசனையின் பின்னர்தான் குற்றவாளிகள் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தயாசிறி: இந்த விடயத்தில் அவர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டிருப்பதாக முன்கூட்டியே நீதிமன்றுக்கு அறிவித்திருக்கிறார்கள். நீரிழிவு, இருதய நோய் உள்ளிட்டவை தமக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அதனால் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான சாத்தியம் அதிகம்.

கேள்வி: சிறைச்சாலை வைத்தியசாலை சுகாதார அமைச்சின் கீழா இயங்குகிறது?

பதில்: இல்லை. நியமனங்களை மாத்திரம் நாம் வழங்குகிறோம். சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு நிர்வாகப் பணிகளை கவனித்துக்கொள்கிறது.

கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் பாஸ்கரலிங்கம் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளாரே?

ராஜித: அது அவர்களிடம் உள்ள இனவாதம். அதனை ஒலிவாங்கிக்கு முன்னால் கூறிப் பயனில்லை. பந்துல குணவர்தன என்பவர் இந்த நாட்டின் நீதியரசரா? இல்லையே. அவர் கூறும் விடயங்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அவர் தமிழர் என்பதால் விடுதலைப் புலி என்று சொல்லும் காலம் இருந்தது தானே? நாங்கள் கல்வி கற்ற காலத்தில் புலிகள் இருக்கவில்லை. அப்போது தமிழர்களை தலயா என்றே அழைப்போம். விடுதலைப் புலிகள் வந்த பின்னர் தமிழர்களை புலிகளாகப் பார்த்தவர்கள் இருந்தார்கள்.

கேள்வி: ஜகத் ஜயசூரிய தொடர்பான விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

ராஜித: அது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. சட்டத்தரணியொருவர் பிரேஸில் அமைச்சில், ஜகத் ஜயசூரிய தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அவ்வளவுதான். ஊடகங்கள் தான் இந்த விடயத்தை பெரிதுபடுத்தியுள்ளன. நம்நாட்டு ஊடகங்கள் அல்ல.

கேள்வி: ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துகளால் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றனவா?

ராஜித: இல்லை. யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதி என்ற வகையில் அது பற்றிக் கதைப்பதற்கும் முன்னிற்பதற்குமான பூரண தகுதி சரத் பொன்சேகாவுக்கு உண்டு. யுத்தம் தொடர்பில் எம்மை விட அவர் அதிகமான விடயங்களை அறிந்து வைத்துள்ளார். யுத்தம் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவர் அதற்குரிய பதிலை வழங்குவதாகக் கூறியிருக்கிறார்.

ஆனால், யுத்தம் என்ற பெயரில் குற்றச்செயல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அது குறித்து சரத் பொன்சேகா கதைக்கலாம். யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தெளிவான முறைப்பாடுகள் இருந்ததால் நாம் விசாரணை நடத்தத் தயாராக இருக்கிறோம். அதுவும் உள்நாட்டு விசாரணை தான். சர்வதேச விசாரணைகள் எதுவும் கிடையாது. யுத்தம் என்ற பெயரில் குற்றமிழைத்திருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் தொடர்பாக பிரச்சினை இருந்தால் ஜகத் ஜயசூரியவுக்காக நாம் குரல் கொடுப்போம்.

கேள்வி: நாட்டை பொறுப்பேற்கக் கூடிய ஒருவர் என பிரதமர் உங்களைச் சொல்லியிருக்கிறாராமே?

ராஜித: யாரோ கதையை மாற்றியிருக்கிறார்கள். அவ்வாறில்லை. புகையிலை தொடர்பான சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடியபோது தனியார் துறையினருக்கு உரிய கடப்பாடுகள் குறித்துப் பேசினோம். அதன்போது நாட்டை வழிநடத்தக்கூடிய ஒருவர் என்பதால், அவரது கருத்துக்கு அமைவாக தனியார் துறையினருக்குரிய பொறுப்புகளை அவர்கள் சரியாக செய்ய வேண்டும் என தனியார் துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அவ்வளவுதான்.

கேள்வி: அவ்வாறு பொறுப்பினை வழங்கினால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனச் சொல்லவும் மாட்டீர்கள் தானே?

பதில்: அதனை மக்கள் தானே வழங்க வேண்டும்.

கேள்வி: புகையிலைக்கு எதிர்ப்பை நீங்கள் வெளியிட்டு வருகிறீர்கள். ஆனால், நாட்டில் கஞ்சா, அபின் ஆகியவற்றைப் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகிறதே?

ராஜித: ஆமாம். எமது நாட்டில் பாரம்பரிய வைத்திய முறைகளுக்காக கஞ்சா, அபின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பாரம்பரிய வைத்திய முறைகளைக் கையாளும் வைத்தியர்கள் என்னிடம் முறைப்பாடு தெரிவித்தார்கள். உடனடியாக இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டேன்.

எமது நாட்டில் கைப்பற்றப்படும் கஞ்சா, அபின் ஆகியனவை நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சுமார் நான்கு வருடங்களின் பின்னரே கையளிக்கப்படுகின்றன. அதன்போது அவை மருத்துவத் தன்மையை இழந்து விடுகின்றன. ஆதலால், இராணுவத்தினரை பயன்படுத்தி கஞ்சா உற்பத்தியினை மிகப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதன் மூலம் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்பதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இவற்றுக்கான கேள்வி அதிகமாக உள்ளது.

கேள்வி: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் அல் ஹுசைனின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கத்தின் கருத்து என்ன?

ராஜித: அது அவருடைய கருத்து மாத்திரமே. ஆனால் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜதந்திரிகள் பலர், எமது நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதாகவே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

செய்திகள்