வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்க போதுமான ஆதாரம் இல்லை!! [தொகுப்புரை]

செப்டம்பர் 14, 2017

வித்தியாவின் தலையின் பிடரி பகுதியில் காணப்படுகின்ற காயம் துப்பாக்கி ஒன்றினால் தாக்கப்பட்ட காயமாகும். சட்டமா அதிபர் திணைக்களம் வித்தியாவின் வழக்கை பொய் சாட்சியகள் கொண்டு நடாத்துகின்றது. திரைப்பட கதைகள் போன்று இந்த வழக்கையும் சட்டமா அதிபர் திணைக்களம் புனைந்துள்ளது. பிரதான சாட்சியாக கருதப்படும் இம்லா என்பவர் மீது ஏற்கனவே 17 வழக்குகள் வேறு நீதிமன்றில் உள்ளன. அவர் ஒரு மோசடி நபர். அவரை எவ்வாறு ஒரு சாட்சியாக சட்டமா அதிபர் திணைக்களம் கருதியது? அரச தரப்பு சாட்சிகள் இடையே முரண்பாடு உள்ளது.

எதிரிகள் அனைவரும் குறித்த குற்றத்துடன் தொடர்புடையாதவர்கள் எனவே அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு புங்குடுதீவு மாணவி வித்திய கொலை வழக்கின் எதிரிகள் சார்பில் ஆயராகி இருந்த சட்டத்தரணிகள் ரயலட்பார் நீதாய விளக்கத்தில் சமர்ப்பணம் செய்துள்ளனர். புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சியலோகனாதன் வித்தியாவின் வழக்கு தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசவர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ரயலட்பார் நீதாய விளக்கத்தில் தொடர் விசாரணையாக நடைபெற்று வருகின்றது.

மோசடி செய்து சிறையில் இருப்பவர் அரச தரப்பு சாட்சி!

இந்த வழக்கு விசாரணையில் நேற்றைய தினம் எதிரிகள் தரப்பு சமர்ப்பணம் நடைபெற்றன. இதன் போதே எதிரிகள் சார்பில் ஆயராகி இருந்த சட்டத்தரணிகளான மஹிந்த ஜெயவர்த்தன, ரகுபதி, ஜெகதீஸ்வரன், ஆகியோர் மேற்படி சமர்ப்பணங்களை செய்துள்ளனர். குறித்த வழக்கில் காத்திரமான சாட்சியங்கள் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களம் சாட்சியாக கூறியுள்ள இப்லா என்பவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் உள்ளன. இவ்வாறான ஒரு மோசடி நபரை எவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களம் சாட்சியாக கருத முடியும்? இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் போதிய சாட்சியங்கள் எதனையும் கொண்டுவர முடியவில்லை. அதனால் சோடிக்கப்பட்ட சாட்சியங்களை கொண்டு பொய் சாட்சி சொல்லியுள்ளதாக சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன முதலாவதாக சமர்ப்பணம் செய்தார்.

தொடர்ந்து சட்டத்தரணி ரகுபதி சமர்ப்பணங்களை முன்வைத்தார், அதில் அரச சாட்சியாக மாறிய வழக்கின் பத்தாம் சந்தேக நபரான சுரேஷ்கரன் தன்னை பாதுகாத்து கொள்வதற்காகவே அவர் சாட்சியாக மாறியுள்ளார். இரண்டாவது கண்கண்ட சாட்சியான நடராசா புவனேஸ்வரன் எனப்படும் மாப்பிள்ளை என்பவரும் நாள் முழுக்க குடிகாரனாக உள்ளார். அவ்வாறு உள்ள ஒருவர் எவ்வாறு சம்பவத்தை நேரில் கண்டதாக கூற முடியும்? முஹமட் இப்லா என்பவர் மோசடி நபர் அவர் சி.ஐ.டி.யினரிடம் இருந்து நன்மைகளை பெறுவதற்காக பொய் சாட்சி கூறியிருக்க முடியும்.

இயலாமையின் வெளிப்பாடே பயங்கரவாத தடைச்சட்டம்

இந்த நிலையில் தான் அரச தரப்பு தங்களுடைய இயலாமையை மறைப்பதற்காக குறித்த வழக்கின் சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து நாலாம் மாடியில் வைத்து விசாரணை செய்தது, மற்றும் ட்ரயலட்பார் முறையில் விசாரணையை ஆரம்பித்தது எனபல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த சட்டத்தரணி ரகுபதி, குறித்த கொலை நடைபெற்ற நோக்கங்களாக இரு விடயங்களை சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். அதில் முதலாவதாக வித்தியாவை துசாந்தன் ஒருதலைபட்சமாக காதல் செய்ததாகவும் அதனை மறுத்த வித்தியவோடு தவறாக நடக்க முற்பட்டதாகவும் அதனால் வித்தியா துசாந்தனின் கன்னத்தில் செருப்பால் அடித்ததாவும் கூறியுள்ளனர். இரண்டாவது நோக்கமாக ஆசியாவை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரை கற்பழித்து கொலை செய்யும் வீடியோ ஒன்றை பெற்று சுவிசில் உள்ள பாதாள உலக குழுவினருக்கு வழங்குவதற்காகவுமே கொலை நடைபெற்றுள்ளது என கூறியுள்ளனர்.

எனினும் வித்தியாவின் தாயாரான  சிவலோகநாதன் சரஸ்வதி தனது மகளுக்கு எந்த காதல் பிரச்சனையும் இல்லை என 13.05.2015 அன்று பிரதி சொலிற்றர் ஜென்ரல் குமார்ரட்ணத்திடம் வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆகவே சட்டமா அதிபர் திணைக்களம் கூறியுள்ள கொலைக்கான முதலாவது நோக்கம் பொய்யாக சோடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குறித்த கொலை சம்பவத்தின் போது காணொளி பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் அரச தரப்பால் நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. எனவே இரண்டாவது நோக்கமும் பொய்யாகவே அரச தரப்பால் சோடிக்கப்பட்டுள்ளது. அடுத்து பெரியாம்பி தான் வித்தியா சென்ற துவிச்சக்கர வண்டியை முதலில் நிறுத்தியாக அரச தரப்பு சாட்சியான சுரேஷ்கரன் கூறியுள்ளார். எனினும் குறுக்கு விசாரணையின் போது சுரேஷ்கரன் தான் துவிச்சக்கர வண்டியை நிறுத்தியதாக புவனேஸ்வரன் கூறியுள்ளார். இது முரண்பாடான சாட்சியமாகும்.

கற்பழிப்பு, கொலை எங்கு நடைபெற்றது?

குறித்த கொலை பாழடைந்த வீட்டில் தான் நடைபெற்றது என அரச தரப்பு கூறியுள்ளது. இது சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதா? கற்பழிப்பு செய்யப்பட்ட இடம் மற்றும் கொலை செய்யப்பட்ட இடங்களை ஆய்வு செய்ததாகவும், எனினும் அங்கு ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை என தடவியல் பொலிஸ் அதிகாரி சாட்சியமளித்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரி மயூரனும் வித்தியா எங்கு கற்பழிக்கப்பட்ட்டார்? கொலை செய்யப்பட்டார்? என்பது கூற முடியாது என தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசு தரப்பு சாட்சிகள் எல்லாமே கட்டமைக்கப்பட்ட உண்மைகள் கொண்ட சாட்சிகளாக தான் உள்ளன.

வித்தியாவின் பிடரியில் துப்பாக்கியால் தாக்கிய காயம் !

வித்தியாவின் பிடரியில் காணப்படும் காயம் துப்பாக்கி ஒன்றின் பின்பக்கத்தினால் தாக்கப்பட்ட காயமாகும். இதனை மறைப்பதற்கே மரபணு பரிசோதனை வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டு, அழிவடைய வைக்கப்பட்டுள்ளது. வித்தியாவை ஒரேயொரு நபரே கற்பழிப்பு செய்துள்ளார். என சட்டத்தரணி ரகுபதி கூறினார். மேலும் சந்தேகத்திற்கு அப்பால் அரசு தரப்பில் சாட்சிகள் நிரூபிக்கப்படவில்லை எனவும், எதிரிகள் சார்பில் நியாமான சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறி குறித்த கொலை சம்பவம் அங்கு நடைபெறவில்லை எனவும் மறுத்திருந்தார்.

இறுதியாக சமர்ப்பணம் செய்த சட்டத்தரணி ஜெகதீஸ்வரன், அரச தரப்பின் சாட்சிகள் இந்த வழக்கின் எதிரிகளோடு எந்த வகையிலும் தொடர்பு படவில்லை. கண்கண்ட சாட்சியாக கூறப்படுகின்ற சுரேஷ்கரனின் சாட்சியம் இந்த எதிரிகளின் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமானதாக இல்லை. என கூறினார். அதனை நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டனர். மாப்பிள்ளை எனப்படும் புவனேஸ்வரன், வித்தியா கொல்லப்படுவதற்கு முன்னர் கள்ளு குடிக்க வரும் போது சுவிஸ்குமார் மற்றும் அவரோடு வந்தவர்கள் கதைப்பதில்லை என கூறியுள்ளார்.

அரச சாட்சியகளிடையே முரண்பாடு !

வித்தியா கற்பழிக்கப்படும் போது எடுக்கப்பட்ட காணொளியை பெரியாம்பி தான் சுவிஸ்குமாரிடம் கொடுத்ததாக மாப்பிள்ளை கூறினார். பின்னர் சந்திரகாசனிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதுவும் முரண்பாடானதாகும். ஆகவே மாப்பிள்ளை வீடியோ கொடுக்கப்பட்டதனை காணவில்லை. இவ்வாறு தான் இலங்கேஸ்வரனின் சாட்சியமும் பொய் என ஆதரங்களுடன் காட்டியுள்ளேன். முஹமட் இப்லா என்பவரை வைத்து சட்டமா அதிபர் திணைகள் திரைக்கதை வசனம் ஒன்றை எழுதியுள்ளது. சுவிசில் கோப்பை கழுவி கொண்டிருந்த ஒருவரை அங்குள்ள மாபியா கும்பல் ஒன்று அணுகி புங்குடுதீவில் உள்ள பாடசாலை பெண்ணொருவரை கற்பழித்து கொலை செய்யும் வீடியோ ஒன்று தேவை என கூறி இங்கு அனுப்பி வைத்ததாக கதை எழுதியுள்ளது.

ஆசியாவில் பெண்கள் கிடைக்காமல் புங்குடுதீவில் தான் இந்த மாபியா கும்பல் பெண்களை தேடியுள்ளது. இதெல்லாம் நம்புவது போன்றா? உள்ளது. சிறைச்சாலை உத்தியோகஸ்தர் அறையில் நிஷாந்த சில்வா வாக்குமூலம் பதிவு செய்யும் போது வைத்தியர்கள் சிலர் நின்றதாக இப்லா கூறியுள்ளார். எனினும் நிஷாந்த சில்வா வைத்தியர்கள் யாரையும் அவதானிக்கவில்லை என கூறியுள்ளார். ஆகவே அரசு தரப்பு சாட்சியங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடானதாக உள்ளதோடு, நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்தளவு காலமும் சிறையில் உள்ள தனது கட்சிக்காரர்களை விடுதலை செய்யுமாறு சமர்ப்பணம் செய்தார். இதனை அடுத்து வழக்கு தீர்ப்பிற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிபதிகளால் தவனையிடப்பட்டுள்ளது. 

செய்திகள்