பிக்குகளை நிந்தனை செய்வது கண்டிக்கத்தக்கது, அஸ்கிரியபீட பதிவாளர்

செப்டம்பர் 13, 2017

பௌத்த பிக்குகளை நிந்தனை செய்யும் வகையில் அறிவிப்புக்கள் விடுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என அஸ்கிரியபீடப் பதிவாளர் மெதகம தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி பௌத்த சாசனத்துக்கான தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள வேளையில் அரசாங்கத்திலுள்ள பல்வேறு தரப்பினர் பிக்குகளை நிந்தனை செய்யும் வகையில் செயற்படுகின்றனர் எனவும் அவர் கூறினார். 

பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை பௌத்த மத குருக்களை நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து மெதகம தம்மரத்ன தேரர்  இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார். 

அரசியலில் அல்லாது வேறு துறைகளில் பிரபலம் அடைந்தவர்கள், அரசியலில் பிரவேசித்து, எமது நாடு தொடர்பில் எந்தவித பற்றும் இன்றி, நாட்டு மக்களுக்கு மாறுபட்ட உணர்வுகளை ஊட்டும் விதத்தில் பௌத்த பிக்குகளை நிந்தித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இது தவறான ஒன்றாகும்.

மத நிந்தனை செய்து கொண்டு அரசியலில் ஈடுபடும் இது போன்ற நபர்களை, பொறுப்பற்ற சமூக விரோதிகளை, அரசியலில் ஈடுபடுத்துவது அரசியல் தலைவர்கள் செய்யும் பிரதான தவறாகவே நாம் பார்க்கின்றோம் எனவும் தேரர் கூறினார். 

செய்திகள்