நீதிமன்றத்தினுள் கருப்பு கண்ணாடி அணிந்த நீதிபதி இளஞ்செழியன்!

செப்டம்பர் 14, 2017

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை வழக்கின் ட்ரயலட்பார் நீதிமன்றின் நீதிபதிகளில் ஒருவரான ம.இளஞ்செழியன் நேற்றைய வழக்கு விசாரணையின் போது கறுப்புக்கண்ணாடி அணிந்து சுவிஸ்குமாரின் சட்டத்தரணியை பார்வையிட்டிருந்தார். இதே போன்று சுவிஸ்குமார் சார்பில் ஆயராகி இருந்த சட்டத்தரணியும் கறுப்பு கண்ணாடி அணிந்து நீதிபதி இளஞ்செழியனை பார்வையிட்டார்.

புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சியலோகனாதன் வித்தியாவின் வழக்கு தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசவர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ரயலட்பார் நீதாய விளக்கத்தில் தொடர் விசாரணையாக நடைபெற்று வருகின்றது.

இந்த விசாரணையில் நேற்றைய தினம் எதிரி தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்கள் நடைபெற்றன. இதன் போது 4 ஆம், 07 ஆம், 09 ஆம் எதிரிகள் சார்பில் ஆயராகி இருந்த சட்டத்தரணி ஜெகதீஸ்வரன், குறித்த வழக்கின் கண்கண்ட சாட்சியம் என சட்டமா அதிபர் திணைக்களத்தால் கூறப்படுகின்ற இலங்கேஸ்வரன் என்பவர் புங்குடுதீவு ஆலடி சந்தியில் நின்றதாகவும் அப்போது சுவிஸ்குமார் மற்றும் அவரது சகாக்கள்,

வெள்ளை வான் ஒன்றில் நின்றதாகவும், அப்போது சுவிஸ்குமார் கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருந்ததாகவும், அந்த வழியாக வித்தியா சென்ற போது, சுவிஸ்குமார் வித்தியாவையே பார்த்து கொண்டிருந்தாகவும் சாட்சியமளித்துள்ளார். இது தொடர்பில் கேள்வி எழுப்பிய சட்டத்தரணி ஜெகதீஸ்வரன் கறுப்பு கண்ணாடி அணிந்துள்ள ஒருவர் எங்கே பார்க்கின்றார் என எவ்வாறு கூற முடியும்?

நெல்சன் மண்டேலா, ஒபாமா போன்ற உலக பிரசித்தி பெற்றவர்களின் பாதுகாவலர்கள் தான் இவ்வாறு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருப்பார்கள். தாங்கள் எங்கே பார்க்கின்றோம் என தமக்கு முன்னாள் உள்ளவர்களுக்கு தெரிய கூடாது என்பதற்காகவே அவர்கள் அவ்வாறு கறுப்பு கண்ணாடி அணிந்திருப்பார்கள். இந்த நிலையில் அரசு தரப்பு சாட்சி சுவிஸ்குமார் எங்கே பார்த்தார் என்பதனை எவ்வாறு கூறினார்?

என தனது வாதத்தை முன்வைத்த சட்டத்தரணி ஜெகதீஸ்வரன், தன்னுடன் கொண்டுவந்த கருப்பு கண்ணாடி ஒன்றையும் காட்டினார். இதனை பார்த்த நீதிபதி இளஞ்செழியன் சட்டத்தரணியை கண்ணாடி அணியுமாறு கூறி தன்னை பார்த்து கொண்டு வலது இடது பக்கமுள்ள ஊடகவியலாளர்களை கண்ணாடி வழியாக பார்க்குமாறு கூறினார். எனினும் சட்டத்தரணி தலையை வலது பக்கம் திருப்ப முயல, இவ்வாறு தான் இலங்கேஸ்வரனும் சுவிஸ்குமார் எங்கே பார்த்திருப்பார் என கூறியிருக்கின்றார் என கூறினார்.

எனினும் அதனை மறுத்த சட்டத்தரணி 15 அடி தூரத்தில் ஒருவர் நின்றால், அவரை கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தால் எங்கே பார்க்கின்றார்? என கூற முடியாது என கூறினார். இதனை அடுத்து சட்டத்தரணி வைத்திருந்த கண்ணாடியை தான் வாங்கி அணிந்த நீதிபதி இளஞ்செழியன் சட்டத்தரணியை பாரவையிட்டார். இவ்வாறன விசாரணைகளால் நேற்றைய விசாரணை சுவாரசியமாக நடைபெற்றன. 

செய்திகள்