டெனீஸ்வரன் பதவி விலகாவிட்டால், கட்சியிலிருந்து நீக்கப்படுவார்!

August 13, 2017

வடமாகாண முதலமைச்சருக்கெதிராக வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தான் கையொப்பமிட்டமை தவறான விடயம் என அமைச்சர் டெனீஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

நேற்று (12) ரெலோ அமைப்பின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவிலுள்ள ரெலோ அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் டெனீஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

21தலைமைக்குழு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த அமைப்பின் 15 உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டெனீஸ்வரன் மீது மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இன்று டெனீஸ்வரன் தன்னிலை விளக்கமளித்தார்.

இதன்போது, முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இருவரை பதவியைத் தியாகம்செய்யுமாறும், மற்றைய இருவரையும் விசாரணை செய்வதற்கு பிறிதொரு விசாரணைக்குழு அமைப்பதற்கு தீர்மானித்தமை, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கடிதம் தரச்சொல்லி முதலமைச்சர் கேட்டமை போன்ற செயற்பாடுகளால் நான் ஆத்திரமடைந்து தமிழரசுக் கட்சியுடன் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டேன்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் கையெழுத்திட்டது தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அத்துடன் எனக்கு இன்னும் நான்கு மாத காலங்கள் அவகாசம் வழங்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றேன் எனத் தெரிவித்திருந்தார்.

எனினும், டெனீஸ்வரனின் இம்முடிவைகட்சி ஏற்கவில்லையெனவும், அவர் பதவி விலகவேண்டுமெனவும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்ததையடுத்து நாளை (இன்று-13) தான் தனது இறுதி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் பதவி விலகாவிட்டால், கட்சியிலிருந்து அவர் நீக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்