சிரேஷ்ட ஊடகவியலாளர் தயாபரன் வீட்டில் 51 பவுண் நகைகள் திருட்டு

செப்டம்பர் 13, 2017

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். தயாபரனின் வீட்டை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 51 பவுண் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். 

உடுப்பிட்டியில் உள்ள அவரது வீடடில் இன்று மதியம் இத்திருட்டு இடம்பெற்றுள்ளது. இத்திருட்டு தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தயாபரனும் அவரது மனைவியும் அலுவலகம் சென்றிருந்தனர். பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றிருந்தனர். 

இந்நிலையில், அங்கு ஆட்கள் எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய திருடர்கள் பட்டப் பகல் வேளையில் இத் துணிகரம் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். 

அவரது மனைவி பிள்ளைகளின் சங்கிலிகள், காப்புகள், மோதிரங்கள் மற்றும் இதர நகைகள் திருடப்பட்டுள்ளன. 

வீட்டு யன்னல் கம்பிகளை வளைத்து உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் வீட்டை சல்லடை போட்டுத் தேடி நகைகளைத் திருடியுள்ளனர். திருடிய பின்னர் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே சென்றுள்ளனர். 

இந்தத் திருட்டு தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயங்களையும் பதிவு செய்தனர். 

ஊடகவியலாளர் தயாபரன் அண்மைக் காலமாக தமிழ்த் தேசியத்திற்கு எதிரான தமிழ் அரசியல்வாதிகளை தமது செய்திகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். 

அதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளையும் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்திருக்கின்றார். அந்தப் பணிகளை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். 

இந்நிலையில், அவரது வீட்டில் மிகவும் திட்டமிட்ட ரீதியில் இத் திருட்டு இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

 

 

இணைப்பு: 
செய்திகள்